அந்தரங்கம் அறிவோம் : இன்னும் சில வருடங்களில் நான் அறுவைச் சிகிச்சை செய்து கொண்டு ஆணாக மாறி, அவளைத் திருமணம் செய்துகொள்வதாக வாக்களித்திருக்கிறேன்.

February 11, 2016

இதுபோன்ற சிகிச்சை மூலம் ஒரு பெண் ஆணாக மாற முடியுமா? முடியும் என்றால்,  நானும் அவளும் திருமணம் செய்து குழந்தை பெற்றுக்கொள்ள முடியுமா?

கேள்வி: நான் ஒரு பெண் . எனக்கு வயது 18. நான் ஒரு பெண்ணை விரும்புகிறேன். நான்கு வருடங்களுக்கு முன், எம் வீட்டுக்கு முன்னால் உள்ள வீட்டில் ஒரு குடும்பம் குடிவந்தது. இரண்டு குடும்பத்தினரும் மிக அன்னியோன்னியமாகப் பழகி வந்தோம்.

ஆனால் ஒரு தவறான புரிதலால் இரண்டு குடும்பத்தினருமே மீண்டும் இணைய முடியாத அளவுக்கு ஒரு பிரச்சினை வெடித்துவிட்டது. நானும் அந்தக் குடும்பத்தின் நான்காவது மகளும் மிகுந்த நெருக்கமாகப் பழகிவந்தோம். திடீரென ஏற்பட்ட இந்தப் பிரிவு எமது நெருக்கத்தை இன்னும் அதிகமாக்கிவிடவே நாம் இருவரும் காதலரானோம்.

ஆனால் நாம் ஓரினச் சேர்க்கையில் இதுவரை ஈடுபடவில்லை. இன்னும் சில வருடங்களில் நான் அறுவைச் சிகிச்சை செய்து கொண்டு ஆணாக மாறி,  அவளைத் திருமணம் செய்துகொள்வதாக வாக்களித்திருக்கிறேன். எனக்காக இன்றுவரை,  அவள் காத்திருக்கிறாள். அண்மையில்  டிஸ்கவரி அலைவரிசையில்,  ஆணுறுப்பு பாதிக்கப்பட்ட ஒருவருக்கு,  அவரது தொடையில் இருந்து சதையை வெட்டி எடுத்து சிகிச்சையளித்து,  அவர் ஒரு குழந்தைக்கும் தகப்பனாகி இருப்பதாகக் காட்டப்பட்டது. இதுபோன்ற சிகிச்சை மூலம் ஒரு பெண் ஆணாக மாற முடியுமா? முடியும் என்றால்,  நானும் அவளும் திருமணம் செய்து குழந்தை பெற்றுக்கொள்ள முடியுமா?

 

பதில்: சிகிச்சை மூலம் ஒரு பெண் ஆணாகத் தோற்றமளிக்கும் வகையில் மாற முடியுமே அன்றி,  சாதாரண ஆண்,  பெண் போல உறவு கொள்ளவோ,  குழந்தை பெற்றுக்கொள்ளவோ முடியாது.

நீங்கள் பார்த்த நிகழ்ச்சியில் ஆண் ஒருவரின் பிறப்புறுப்பு பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சையே செய்துகொண்டிருக்கிறார். ஆனால் அடிப்படையில் அவர் ஒர் ஆண் என்பதை மறந்துவிடாதீர்கள்.

எனவே ஓரினச் சேர்க்கையில் இயற்கையான முறையில் குழந்தை பெற்றுக்கொள்வது நடக்காத காரியம். ஓரினச் சேர்க்கை தவறல்ல என்ற வாதம் உலகம் முழுவதும் ஓங்கி ஒலித்து வருகிறது.

ஆனால் நம் நாட்டில் இன்னமும் ஒரு பால் திருமணங்கள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

ஏற்கனவே உங்கள் இருவரது குடும்பத்திற்கும் இடையே பலத்த மோதல் ஏற்பட்டிருக்கும் நிலையில் நீங்கள் இருவரும் திருமணம் செய்துகொள்வதால் அந்த மோதல் இன்னும் வலுக்கும் வாய்ப்புகளே அதிகம்.

இந்த நிலையில் நீங்கள் உங்கள் நெருக்கத்தைக் குறைத்துக்கொண்டு வேறு திசையில் பயணிக்கத்தொடங்கினால் நாளடைவில் சாதாரண பெண்களைப் போலவே வெவ்வேறு ஆண்களை மணந்துகொண்டு வாழ்க்கையைத் தொடரலாம்.

நீங்கள் கொடுத்த வாக்குறுதிக்காக உங்கள் நண்பி இன்னமும் காத்திருப்பதாக சொல்லியிருக்கிறீர்கள்.

இது எத்தனை நாட்களுக்கு என்பதையும் நீங்கள் எண்ணிப்பார்க்க வேண்டும்.

மற்றவர்கள் சொல்லி உங்கள் உறவைத் துண்டித்துக்கொள்வதற்குப் பதிலாக நீங்களாகவே சுமுகமாக விலகிக்கொண்டால்,  இந்த ஏமாற்றம் தரும் பாதிப்பேனும் குறையும்.