அந்தரங்கம் அறிவோம் : மனதளவில் நாங்கள் கணவன்-மனைவியாகத் தான் வாழ்கிறோம்.அவரைப் பிரிந்து வாழ என்னால் முடியாது.

February 12, 2016

இந்த வயது வித்தியாசத்துடன் திருமணம் செய்துகொள்வது தவறா? இதனால் ஏதும் பிரச்சினைகள் ஏற்படுமா? 

கேள்வி: எனக்கு வயது 26. பெண். நான் 20 வயது ஆண் ஒருவரை விரும்புகிறேன். அவரும்தான். என் வீட்டில் இந்தத் திருமணத்துக்கு சம்மதம் வாங்கிவிடுவேன். அவர்கள் வீட்டில் நிச்சயம் இதற்கு ஒத்துக்கொள்ள மாட்டார்கள். மனதளவில் நாங்கள் கணவன்-மனைவியாகத் தான் வாழ்கிறோம். இரு வீட்டார் சம்மதத்துடன்தான் இதைச் செய்ய வேண்டும் என்று விரும்புகிறோம்.

அவரைப் பிரிந்து வாழ என்னால் முடியாது. இந்த வயது வித்தியாசத்துடன் திருமணம் செய்துகொள்வது தவறா? இதனால் ஏதும் பிரச்சினைகள் ஏற்படுமா? இந்தத் திருமணத்தை நடத்துவதற்கு என்ன செய்ய வேண்டும்?

பதில்: ஆறு வயது வித்தியாசம் என்பது சற்று அதி கம்தான். இதனால் உடலளவில் எந்தப் பிரச்சினையும் வராது. உங்கள் மன முதிர்ச்சியின் அடிப்படையில் சில தவறான புரிதல்களால் சிறு சிறு சிக்கல்கள் தோன்றலாம். ஆனால் நீங்கள் மனம் வைத்தால் அதை உங்களால் தவிர்க்கவும் முடியும். அது ஒரு பக்கம் இருக்கட்டும்.

உங்கள் வீட்டில் இந்தத் திருமணத்துக்கு சம்மதம் பெற முடியும் என்றால், உங்கள் வீட்டாரைக் கொண்டே உங்கள் காதலரது குடும்பத்தினரையும் ஒத்துக்கொள்ளச் செய்ய முயற்சிக்கலாம்.

ஆனால், அதற்கு குறைந்தது இன்னும் இரண்டு வருடங்களேனும் காத்திருக்க வேண்டும்.

ஏனென்றால், இருபது வயதில் ஒரு ஆணுக்குத் திரு மணம், அதுவும் ஆறு வயது கூடிய ஒரு பெண்ணுடன் செய்துவைக்க விரும்பமாட்டார்கள். அதேவேளை, இந்த இரண்டு வருட இடைவெளிக்கு உங்கள் வீட்டினர் சம் மதிப்பார்களா என்பதும் சந்தேகமே.

நீங்கள் எத்தனை வருடங்களாகக் காதலிக்கிறீர்கள் என்று தெரியாது. ஆனால், இந்த இரண்டு வருட இடை வெளி என்பது, உங்கள் காதலின் உண்மையான முகத்தை உங்கள் இருவருக்குமே காட்டிவிடும்.

இரண்டு ஆண்டுகள் கழிந்தும் இதே காதல் உங்கள் இருவரிடமும் இருக்கும் என்றால், வேறு எது குறித்தும் கவலைப்படாமல் தாராள மாக திருமணம் செய்துகொள்ளலாம்.