அந்தரங்கம் அறிவோம் : நாம் உறவிலும் ஈடுபட்டிருக்கிறோம். ஆனால், அண்மையில் தான் அவர் ஏற்கனவே திருமணமாகி, மூன்று மாதக் குழந்தைக்குத் தந்தை என்பது தெரியவந்தது.

February 14, 2016

 நான் தற்கொலைக்கும் முயன்று, அதிலிருந்து மீண்டு வாழ்கிறேன். ஆனால் என்னால் அவரை மறக்க முடியவில்லை.​

கேள்வி: எனக்கு வயது பதினெட்டு. நான் கடந்த 3 வருடங்களாக ஒருவரைக் காதலித்தேன். அவரும் தான். அவருக்கு வயது 20. நாம் உறவிலும் ஈடுபட்டிருக்கிறோம். ஆனால், அண்மையில் தான் அவர் ஏற்கனவே திருமணமாகி, மூன்று மாதக் குழந்தைக்குத் தந்தை என்பது தெரியவந்தது. அவரது மனைவிக்கோ வயது 29. எமது விவகாரம் அவரது மனை விக்குத் தெரிந்து, என்னை பொலீஸ் நிலையம் வரை இழுத்து அவமானப்படுத்திவிட்டார்.

இப்போது என் காதலர் என்னை ஒதுக்கி விட்டார். நான் தற்கொலைக்கும் முயன்று, அதிலிருந்து மீண்டு வாழ்கிறேன். ஆனால் என்னால் அவரை மறக்க முடியவில்லை. இந்த நிலையில், எனக்குப் புதிய வாழ்க்கை அமையுமா?

பதில்: பயப்பட வேண்டாம் சகோதரி. நிச்சயமாக உங்களுக்கு சிறப்பானதொரு வாழ்க்கை காத்தி ருக்கிறது.

இயற்கை எப்போதுமே, வாழ்க்கையில் அடி பட்ட வர்களுக்கே அர்த்தபூர்வமான வாழ்க்கையைப் பரிசளிக்கிறது. நீங்களும் அந்தப் பரிசுக்குத் தகுதியானவரே.

உங்கள் காதலர் ஏற்கனவே திருமணமானவர் என்பது தெரியாமல்தானே நீங்கள் அவர் மீது காதல் வயப்பட்டீர்கள்? அதாவது, நீங்கள் அவரை முழுதாக நம்பித்தான் உங்களை, உங்கள் வாழ்க்கையை அவரிடம் ஒப்படைத்தீர்கள். ஏமாற்றியது அவர்தான்.

ஆகவே, இதில் உங்களைக் குற்றவாளியாக யாரும் சொல்ல முடியாது.

நீங்கள் அவரது மனைவியின் வயதைக் குறிப்பிட்டி ருக்கிறீர்கள். தன்னை விட ஒன்பது வயது மூத்த ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டதனால், அவரது வாழ்க்கை கசப்பாக இருக்கலாம் என்ற ஒரு பார்வையும் உங்களிடம் இருப்பதை, உங்களது முழுக் கடிதமும் உணர்த்துகிறது.

இதன்மூலம், இன்னமும் அவரை மறக்காமல், மீண்டும் அவர் உங்களைத் தேடிவந்தால், அவருடன் இணைந்து வாழத் தயாராக இருக்கும் உங்களது மனோநிலையும் தெள்ளத் தெளிவாகவே தெரிகிறது. நீங்கள் குறிப்பிட்ட அதே வயது வித்தியாசத்தின் அடிப் படையில், அவர்கள் இருவரது திருமணமும் ஒரு காதல் திருமணமாகவே இருக்கவேண்டும் என்று தெரிகிறது.

எனவே, அவர் மீண்டும் உங்களிடம் வருவார் என்ற எதிர் பார்ப்பையும், அப்படி வந்தால் அவருடனேயே சேர்ந்து வாழலாம் என்ற உங்களது ஆசையயும் அடியோடு மறந்து விடுங்கள்.

உங்களுக்கு இன்னும் வயது இருக்கிறது. நிச்சயமாக உங்களுக்கென்றே பிறந்திருக்கும் ஒருவர் உங் களைக் கண்டடைவார். அதுவரையில் பொறுமையாக இருங்கள்.