அந்தரங்கம் அறிவோம் : திருமணத்தின் பின் என்னவாகும் என்ற பயமும் இருக்கிறது. எனது பயத்தைத் தீர்ப்பீர்களா?

February 17, 2016

இன்றைய காலத்தில், சிறு சிறு காரணங்களும், பெரும் பிரிவுக்குக் காரணமாகி விடுகிறது. எந்தக் காரணம், எப்போது அந்தப் பிரிவை ஏற்படுத்திவிடும் என்பதை யாராலும் சொல்லிவிட முடியாது

கேள்வி: எனக்கு வயது 20. என் காதலருக்கு 28. இருவரும் பரஸ்பரம் அதீத அன்பு வைத்திருக்கிறோம். ஆனால், எங்களுக்குள் அடிக்கடி சிறு சிறு சண்டைகள் ஏற் பட்டு மறையும். அன்பென்றாலும் ஆத்திரமென்றாலும் என் காதலர் அளவுக்கு அதிக மாகவே தருகிறார்.

ஆனால் அவரது கோபம் இரண்டு நாட்களுக்கு மேல் நீடிப்பதில்லை. நானும் கோவக்காரிதான். இப்படியே இருந்தால், திருமணத்தின் பின் என்னவாகும் என்ற பயமும் இருக்கிறது. எனது பயத்தைத் தீர்ப்பீர்களா?

பதில்: பிரச்சினையைச் சொல்லிவிட்டீர்கள். பிரச்சினைக்கான காரணத்தையும் சொல்லிவிட்டீர்கள். பிறகென்ன? பிரச்சினையை நீங்களே தீர்த்துக்கொள்ள வேண்டியதுதான். 

பொதுவாகவே காதலர்களுக் கிடையே அடிக்கடி சிறு சிறு உரசல்கள் தோன்றத்தான் செய்யும். பலரும் அதைக் கண்டு கொள்வதில்லை.

திருமணத்தின் பின் அதே பிரச்சினை பூதாகாரமாகத் தோன்றும்.

காரணம், காதலின்போது நாம் காட்டும் கோபத்தால், எங்கே நம்மவர்/ள் பிரிந்துவிடுவாரோ/ளோ என்கிற பயம்தான். திருமணத்தின் பின், என்ன பிரச்சினையானாலும், வீட் டுக்குள்ளே தானே இருக்க வேண்டும் என்பதால் அதை அசட்டையாக விட்டு விடுகிறார்கள்.

இன்றைய காலத்தில், சிறு சிறு காரணங்களும், பெரும் பிரிவுக்குக் காரணமாகி விடுகிறது. எந்தக் காரணம், எப்போது அந்தப் பிரிவை ஏற்படுத்திவிடும் என்பதை யாராலும் சொல்லிவிட முடியாது.

எனவே, மேகம் கருக்கிறது என்றால், அதாவது, பிரச்சினை மூளப்போவதாகத் தெரிந்தால், உடனே பேச்சை மாற்றிவிடவோ அல்லது ஏதேனும் காரணத்தைக் காட்டி பேசுவதை அப்போதைக்கு நிறுத்திவிட்டு, சற்று நேரம் கழித்து மீண்டும் தொடரலாம்.

கோபம் என்பது அவ்வப்போது தோன்றி மறையும் ஒரு உணர்வே என்பதை உண்மையான அன்பு அறியும்.

அந்த அன்புக்கு, விட்டுக் கொடுக்கும் பண்பும், மன்னிக்கும் பண்பும் இயல் பாகவே இருக்கும். உங்கள் அன்பும் அத்தகை யதானால் பிரச்சினை ஏதுமில்லை.