அந்தரங்கம் அறிவோம் : என் மனைவி எங்கேயோ வெறித்துப் பார்க்கிறார். தனக்குத் தானே பேசுகிறார். சுருக்கமாகச் சொல்லப்போனால், என் மனைவி பழைய மாதிரி இல்லை.

February 21, 2016

இதை மனமாற்றம் என்று சொல்வதை விட, மன அமைதி குலைந்திருப்பது என்று கொள்ளலாம். 

கேள்வி: என் மனைவிக்கு வயது இருபத்தாறு. எமக்குத் திருமணமாகி, இரண்டு வருடங்கள் ஆகின்றன. இன்னும் குழந்தைகள் இல்லை. அது குறித்து நானோ, அவரோ ஏதும் யோசிக்கவில்லை.

ஏனெனில், இன்னும் எமக்கு வயது இருக்கின்றது என்பதே. கொஞ்ச காலமாக என் மனைவி எங்கேயோ வெறித்துப் பார்க்கிறார். தனக்குத் தானே பேசுகிறார். வெளியே செல்வதில், உறவினர், நண்பர்களைச் சந்திப்பதில் மிகுந்த விருப்பம் கொண்ட அவர், தற்போது வீட்டை விட்டு வெளியே வரவே மாட்டேன் என்கிறார்.

இன்னும் பல பிரச்சினைகளை அவரிடம் காண்கிறேன். சுருக்கமாகச் சொல்லப்போனால், என் மனைவி பழைய மாதிரி இல்லை. இதற்கு என்ன காரணம் என்றும் என்னால் அறிய இயலவில்லை. எதனால் இந்த நிலைமை?


பதில்: மிகத் தெளிவாகத் தெரிகிறது சஞ்சீவன். உங்கள் மனைவிக்கு, தனக்குக் குழந்தை இல்லையே என்பதைவிட, அக்கம்பக்கத்தார் சொல்லும் குறைகளே அவரது அமைதியைக் குலைத்திருக்கின்றது. நீங்கள் ஒருவருக்கொருவர் தைரியமாக இருந்தாலும், சமூகத்தில்  அவர் எதிர்நோக்கும் பிரச்சினைகள் உங்களுக்கு இல்லை என்பதே அவரது திடீர் மனமாற்றத்துக்குக் காரணம்.

இதை மனமாற்றம் என்று சொல்வதை விட, மன அமைதி குலைந்திருப்பது என்று கொள்ளலாம். 

மனதை அமைதியாக வைத்திருப்பது என்பது கடினமான காரியம்தான். ஆனால் ஒருவர் தனது மனதை அமைதியாக வைத்திருப்பது மிக மிக அவசியம்.

மனம் அமைதியாக இல்லாவிட்டால் எந்த வேலையிலும் ஈடுபட முடியாது.

எந்த வேலையையும் முழுமையாகச் செய்ய முடியாது. திடீர் திடீர் என்று கோபம் வரும். மிக நெருங்கியவர்கள் மீது அந்தக் கோபத் தைக் காட்ட வேண்டியதிருக்கும்.

அதனால் அருகில் நெருக்கமாக உள்ளவர்கள் எல்லாம் பகைவர்களாக மாறுவார்கள். மன அமைதி இல்லாதபோது அறிவு தடுமாறும். எந்த முடிவையும் சரியாக எடுக்க முடியாது.

முடிவு எடுத்தாலும் தவ றானதாகவே முடிந்து விடும்.

மன அமைதி இன்மையால் உறக்கம் வராது. பலர் தூக்க மாத்திரை போட்டுக் கொண்டு உறங்குவதற்கு மன அமைதி இன்மையே காரணமாகும்.

மன அமைதி இன்மை உறக்கத்தைக் கெடுப்பதோடு உடல் நலனையும கெடுக்கும். 

மன அமைதி இன்மை புகை, மது, மங்கை என்ற தவறான வழிகட்கு எல்லாம் இட்டுச் செல்லும்.

பல குடும்பங்கள் அழிந்தது - அழிவது எல்லாம் - ஆழமாக ஆராய்ந்து பார்த்தால் மன அமைதி இன்மையே அடிப்படைக் காரணமாகும்.

மன அமைதி இல்லாதவர்கள் மனம் விட்டு சிரிக்கவும் முடியாது.

எப்போதும் முகம் இருளடைந்தே இருக்கும். அதனால் மன அமைதியின் இன்றியமையாமையைப் புறக்கணிக்காமல் எச்சரிக்கையாக இருந்து அமைதியைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

மன அமைதி குலைவ தற்குக் காரணங்கள் இரண்டே இரண்டு தான். ஒன்று, ஒருவன் தனது எண்ணங்களால், பேச்சால், செயல்பாடுகளால் மன அமைதியை இழந்து விடுதல்.

மற்றொன்று, மற்ற வர்களால் மன அமைதி இழத்தல். ஆக, நம்மாலும் மற்றவர்களாலும் இந்த இரண்டு வகையாலும் மன அமைதி கெடுகின்றது.

ஒரு சிலர் தாங்கள் அறியாது, ஆரா யாது, ஆசை காரணமாகச் செய்கின்ற செயல்களின் விளைவினால் மன அமைதியை இழக்கிறார்கள்.

இவர்கள் தங்கள் தவறுகளைப் புறக்கணித்த போதும் மனசாட்சி இடைவிடாது உறுத்திக் கொண்டே இருக்கும். அதனால் மன அமைதியை இழப்பர்.

யாரையேனும் கடுமை யாகப் பேசிவிட்டு வருந்துதல், தனக்கு இருக்கும் செல்வாக்கால் வரம்பு மீறிய செயல்களைச் செய்து விட்டு வருந்துதல் போன்றன

எல்லாம் மன அமைதியை கெடுத்து விடு கின்றன. சிலர் வீண் செலவு செய்து விட்டு வருந்துதல், நேரத்தை வீண்டித்துவிட்டு வருந்ததல் இதுபோன்ற செயல்களால் அமைதியை இழந்து தவிப்பதும் உண்டு.

பலர் மன அமைதியை இழப்பதற்கு அவர்களோடுதொடர்புடையவர்கள் காரணமாக இருப்பார்கள்.

மன உறுதி இல்லாதவர்கள் பிறரால் மன அமைதி கெடுவதே அதிகமாகும்.

குடும்பத் தில் இருந்தே இந்தச் சிக்கல்கள் தொடங் குகின்றன.

குழந்தைகள் சரியாகப் படிக்கவில்லை, வீட்டில் உள்ளவர்கள் சொன்னபடி கேட்கவில்லை, குடும்பத்தில் அளவிற்கு மீறிய செலவினங்கள் - இப்படி ஏதேனும் ஒரு காரணம் பெற்றோரின் மன அமைதிக்குப் பாதிப்பை ஏற்படுத்தி விடுகின்றன.

சிலர் தம் தாட் சண்யம், கருணை காரணமாகவே மன அமைதியை இழந்து விடுகிறார்கள்.

பாவம் என்று வேலை தெரியாதவனை ஒரு வேலைக்கு வைத்துக் கொள்ளுதல், பாவம் என்று உதவி செய்துவிட்டு அது திரும்ப வராதபோது மன அமைதியை இழத்தல், அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு கடன் கொடுத்து விட்டு அதனை வசூல் செய்யாதபோது மன அமைதி இழந்து விடுதல், ஒருவரை நம்பி மோசம் போன போது மன அமைதியை இழத்தல் - இப்படிச் சிலர் மன அமைதியை இழந்து விடுகின்றனர்.

அமைதி என்பது வெளியில் இல்லை. அது நம்முள்ளேதான் இருக்கிறது. அதைக் கண்டறிந்து நாம்தான் பாதுகாக்க வேண்டும். வளர்த்துக் கொள்ள வேண்டும்.

முதலில், ஒரு தாளை எடுங் கள், உங்கள் அமைதி கெட்ட தற்குரிய காரணங்களை வரிசைப் படுத்துங்கள். அமைதியாக இருந்த நாட்களை எண்ணிப் பாருங்கள். அதற்குப் பிறகு எப்போதிலிருந்து, எப்படிஅமைதி கெட்டது என்பதற்குரிய கார ணங்களைக் கண்டறியுங்கள்.

வரிசைப்படுத்துங்கள். என் மன அமைதி குலைந்தது எதனால் என்று கண்டறிந்து அதை நீக்க முயற்சிக்க வேண்டும். அதுவே மன அமைதியை மீண்டும் பெறுவதற்குரிய சிறந்த வழியாகும்.

அமைதியை வளர்த்துக் கொள்ள சில விதிமுறைகள் உள்ளன. அதைத் தெரிந்துகொள்ளுங்கள்.

நல்ல, முறையான பழக்க வழக்கங்கள் அமைதியை நல்கும். நமது முறையான பழக்க, வழக்கங்களே - அதிகாலையில் எழுதல், குளித்துவிட்டுப் பணிகளுக்குச் செல்லல் போன்ற சிறு சிறு செயல்கள்தாம் - நம் குழந்தைகளின் நல்ல பழக்கத்திற்கு நிரந்தர பாடமாக அமைகின்றன.

தந்தை தாம் புகை பிடிப்பதை அங்கீ கரித்துக்கொள்கிறார். தன் மகன் புகை பிடிக்கும்போது மன அமைதியை இழந்து விடுகின்றார். காரணம் மகனைத் திருத்தும் தகுதியை அவர் இழந்துவிடுகிறார்.

ஆகையால், அவர் முதலில் தன்னை மாற்றிக்கொள்ளவேண்டும்.

முடியுமான காரியங்களை முடியும் என்றும் முடியாதவற்றை மறுத்து விடுதலும் உங்கள் மன அமைதிக்கு முக்கியமான ஒரு காரணம்.

மறுப்பது என்பது அப்போதைக்குச் சிரமாக இருந்தாலும் நாளடைவில் முடியாத காரியத்தை முடிக்கவேண்டும் என்ற மன அழுத்தமே மன அமைதி குலைவதற்குக் காரணமாகிவிடும்.

அடுத்து, நல்ல நட்பு. நல்ல நண்பர்களைப் பெற்றிருப்பது வாழ் வில் கிடைத்தற்கரிய பெரும் பேறாகும்.

நல்ல நண்பர்கள் இருக்கும்போது தீய சிந்தனைக்கோ, தீய பேச்சுக்களுக்கோ இட மில்லை. தீமையில்லாதபோது அமைதி நிலைபெறுகிறது. நல்ல நூல்களும் மன அமைதிக்கு வழி வகுக்கிறது.


பிறர் செய்யும் சில குறைகளைப் பொறுத்துக் கொள்ளவும், சில குறைகளை மன்னிக்கவும், சிலவற்றை முழுமையாக மறந்து விடவும் கற்றுக்கொள்வதால் பலரது அமைதி பாதுகாக்கப்படுகிறது.

தியானப் பயிற்சி போன்ற சுய கட்டுப்பாடுகளால் மனம் கட்டுப்படுத் தப்பட்டு அமைதி காக்கப்படுகிறது.

சில வகையான துன்பங்கள் - விரைவில் தீர்க்க முடியாத, ஊனங்கள், அவமானங்கள் என்பன மன அமைதியைக் கெடுத்து விடுவதுண்டு. அத்தகைய சூழலில் இறையருளை எண்ணி நமது கடமை யைச் செவ்வனே ஆற்றுவதே மன அமைதிக்குச் சிறந்த வழியாகும்.


நாம் அறிந்தோ அறியாமலோ சில தவறுகளைச் செய்து இருப்போம். அதற்குப் பிராயச்சித்தமாக, அதற்கு ஈடுசெய்யும் வகையில் சில நன்மைகளைச் செய்யும்போது நமக்கு மன அமைதி ஏற்படுகின்றது.

இது ஒரு வகை.
மற்றொரு வகை நாம் செய்யாத ஒரு தவறுக்காக தண்டனை ஏற்க வேண்டிவரும். அப்போது, நமக்கு இப்போது ஏற்பட்டுள்ள துன்பம் ஏற் கனவே செய்த தவறுக்கு உரியது என்று சமநிலைப்படுத்திக்கொண்டால் அமைதி யை இழக்க நேரிடாது. 

மன அமைதியும் மன உறுதியும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. மனதை அமைதியாக வைத்திருப்பவர்கள் எந்தக் காரியத்திலும் மன உறுதியுடன் இருப்பார்கள்.

இந்த இரண்டு தன்மைகளையும் பாதுகாக்கவும் வளர்த் துக்கொள்ளவும் எவ்வித முதலீடு தேவை இல்லை. பொருட்செலவும் செய்ய வேண்டுவதில்லை.

உணர்ச்சி பூர்வமாக இருப்பதை விடுத்து அறிவு பூர்வமாகச் சிந்தித்து நம்மை நாமே சரிசெய்துகொள்வதுதான் நாம் செய்ய வேண்டிய செயலாகும்.

ஆகையால், தற்போது உங்கள் மனைவிக்குத் தேவை, மன அமைதி. அந்த அமைதியை உங்களால் ஏற்படுத்த முடியும்.

முதலில், அவரது மனக் கிடக்கையை உங்களிடம் கொட்ட அவருக்கு உதவுங்கள்.

அவரது கேள்விகள், சந்தேகங்களைக் களையுங்கள். பின்பு, அவரது நியாயமான கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு என்ன செய்யவேண்டுமோ, அதைச் செய்யுங்கள்.