அந்தரங்கம் அறிவோம் : அவள் என்னை விட 15 வயது குறைந்தவள். இந்நிலையில் நான் அவளுக்கு என்ன பதில் கூறுவது? இத்தனை வயது வித்தியாசத்தில் திருமணம் செய்யலாமா?

February 24, 2016

கணவன்- மனைவிக்கிடையே பதினைந்து வயது வித்தியாசம் தவிர்க்கப்படுவது நல்லது...

கேள்வி: எனக்கு ஒரு அத்தை மகள் இருக்கிறாள். அவள் என் மீது அதிக பாசமும் அக்கறையும் கொண்டவள். சில நாட்களின் முன்பு என்னை விரும்புவதாகவும் என்னை முடிவு கூறுமாறும் கேட்டாள். எனக்கும் அவள் மீது அன்பும் பாசமும் இருக்கத்தான் செய்கிறது.

பிரச்சினை என்னவென்றாள் அவள் என்னை விட 15 வயது குறைந்தவள். இந்நிலையில் நான் அவளுக்கு என்ன பதில் கூறுவது? இத்தனை வயது வித்தியாசத்தில் திருமணம் செய்யலாமா? 

 பதில்: உங்கள் இருவரது வயதையும் நீங்கள் குறிப் பிடவில்லை. இந்தக் கேள்விக்கு பதில் சொல்வதற்கு உங்கள் இருவரது வயதும் அவசியம். 

உங்களுக்கு சுமார் 40 வயதாகவும், உங்கள் முறைப்பெண்ணுக்கு இருபத்தைந்து வயதாகவும் இருந்தால், இந்தத் திருமணத்தைச் செய்து கொள்வதில் ஏற்படக்கூடிய பிரச்சினைகள் குறைவாக இருக்கும்.

ஏனென்றால், இந்தக் காலத்தில், 25 வயதில ஒரு பெண் எடுக்கக்கூடிய முடிவுகள் தீர்க்கமானதாகவும் அந்த முடிவின் சாதக பாதகங் களைத் தீர அலசியும் எடுப்பதாகவே இருக்கும்.

காரணம், தமது இளமைக் காலத்தை நிறைவு செய்யும் நிலையில், இருபத்தைந்து வயதைத் தாண்டும் பெண்களிடம்,  எதிர்கால வாழ்க்கை குறித்த புரிதல்கள் ஓரளவுக்குத் தெளிவாகவே இருக்கும். 

உங்களது முறைப்பெண்ணுக்கு பதினாறு அல்லது பதினேழு வயதாக இருந்தால், இந்தத் திருமணத்தைத் தவிர்த்துவிடுவது நல்லது.

ஏனென்றால், அவர் தற்போது தான் தனது இளமைப் பருவத்துக்குள் காலடி எடுத்து வைக் கிறார்.

ஒருவேளை அவரது வயதையொத்த ஆண்கள், பெண்களுடன் பழக வாய்ப்பில்லாத நிலையில், சுமார் முப்பது அல்லது முப்பத்திரண்டு வயதுடைய உங்களிடம் அவர் சகஜமாகப் பழக முடிவதால், உங்கள் மீதான நட்பு அவருக்குக் காதலாகத் தெரியலாம். 

நீங்கள் இந்தக் காதலை ஏற்றுத் தொடர்ந்தால் கூட, உங்கள் திருமணத்துக்காக இன்னும் சுமார் ஆறேழு வருடங்கள் காத்திருக்க வேண்டி வரும்.

இந்தக் காலகட்டத்திற்குள், அவருக்குள்ளும் ஒரு முதிர்ச்சி ஏற்படும்.

அப்போது, உங்களைத் திருமணம செய்து கொள்வதான தனது முடிவில் சந்தேகம் ஏற்படும் பட்சத்தில், உங்கள் இருவருக்குமே அது பாதகமாகவே அமையும்.

இந்த நவநாகரீக உலகில், ஒத்த சிந்தனையுடைய, சமூகம் குறித்த, வாழ்க்கை குறித்த ஒத்த பார்வையுடைய இருவர் திருமணம் முடிப்பதே சிறந்தது.

இருவருடைய எண்ணமும் ஒன்றாக இருப்பதால், அந்த வாழ்க்கையில் பரஸ்பரப் புரிந்துணர்வு நிறைந்திருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.

எனவே, கணவன்- மனைவிக்கிடையே பதினைந்து வயது வித்தியாசம் தவிர்க்கப்படுவது நல்லது.