அந்தரங்கம் அறிவோம் :பாடசாலையை விட்டு விலகியதும்தான் அந்தப் பெண் மீது எனக்குக் காதல் இருந்ததை உணர்கிறேன். இப்போது என் காதலை அவளிடம் சொல்ல முடியாமல் தவிக்கிறேன்.

February 28, 2016

ஆறு வருடங்களாகியும் அவளை என்னால் மறக்க முடிய வில்லை.

கேள்வி: நான் ஒரு ஆண். வயது 24. பாடசாலை படிக்கும்போது என்னுடன் படித்த ஒரு மாணவியையும் என்னையும் இணைத்து நண்பர்கள் கேலி செய்வார்கள். அதை நான் பொருட்படுத்தவில்லை. பாடசாலையை விட்டு விலகியதும்தான் அந்தப் பெண் மீது எனக்குக் காதல் இருந்ததை உணர்கிறேன். இப்போது என் காதலை அவளிடம் சொல்ல முடியாமல் தவிக்கிறேன்.

ஆறு வருடங்களாகியும் அவளை என்னால் மறக்க முடிய வில்லை. அவள் திருமணம் முடித்துவிட்டாளா, இல்லையா என்பதுகூடத் தெரியவில்லை. எனக்கு ஒரு நல்ல பதில் கூறவும்.

பதில்: அதெல்லாம் சரிதான். ஆனால் உங்களது அலைபேசி இலக்கங்களையும் தந்து பிரசுரிக்கச் சொல்லிக் கேட்டிருப்பது... ‘கொஞ்சம் ஓவர்தான்’!
உங்களது நிலை புரிகிறது. ஒன்று நம் கையை விட்டுப் போனதும்தான் அதன் பெறுமதி நமக்குத் தெரியவரும்.

அதைப்போன்றதுதான் உங்கள் பிரச்சினையும். ஆனால், ஆறு வருடங்களாக நீங்கள் அவரைத் தேடுவதற்கு முயற்சி யேதும் எடுத்ததாகத் தெரியவில்லையே... அது ஏன்?

உங்கள் பாடசாலையில் படித்த மாணவி என்றால், நிச்சயமாக அவருடைய நண்பி யாரேனும் உங்கள் அயலில் வசிக்க வாய்ப்பிருக்கிறது. அவரிடம் கேட்டிருக்கலாம்.

அல்லது உங்கள் நண்பர்கள் கூட நீங்கள் கூறும் பெண்ணை எங்கேனும் கண்டிருக்கலாம், அவரது வீடு இருக்கும் இடம் தெரிந்திருக்கலாம். அதைக் கண்டுபிடித்தாலே போதுமே, ஏனையவற்றை நீங்களே பார்த்துவிடலாமே? இதிலென்ன பிரச்சினை?

உடனடியாக அவரது நண்பி ஒருவரைத் தேடிக் கண்டுபிடியுங்கள். அவர் மூலம் உங்கள் காதலி(!)யைக் கண்டுபிடித்து உங்கள் எண்ணத்தை வெளிப்படுத்தலாம்.