அந்தரங்கம் அறிவோம் : தலைமுடியை வளர்த்துக்கொண்டு ரவுடி போல் இருக்கிறார். இது எனக்குப் பிடிக்கவில்லை. ஆனால் நான் அவரைக் காதலிப்பது உண்மை.

February 29, 2016

அவரைத் திருமணம் செய்வதா அல்லது மறுத்து விடுவதா என்று தெரியாமல் குழம்பிப் போயிருக்கிறேன். எனக்கொரு நல்ல பதில் தாருங்கள்.

கேள்வி: நான் ஒரு பெண். எனக்கு, எனது மச்சானுடன் திருமணம் பேசி வைத்திருக்கிறார்கள். ஆனால் அவர் வேலைக்குச் செல்வதில்லை. தலைமுடியை வளர்த்துக்கொண்டு ரவுடி போல் இருக்கிறார். இது எனக்குப் பிடிக்கவில்லை. ஆனால் நான் அவரைக் காதலிப்பது உண்மை.

திருமணமானால் எல்லாம் சரியாகிவிடும் என்கிறார்கள் என் பெற்றோர். இவர்கள் சொல்வதைக் கேட்டு அவரைத் திருமணம் செய்வதா அல்லது மறுத்து விடுவதா என்று தெரியாமல் குழம்பிப் போயிருக்கிறேன். எனக்கொரு நல்ல பதில் தாருங்கள்.

பதில்: என்னவொரு குழப்பமான கேள்வி இது! உங்களுக்குப் பிடிக்கவில்லை என்கிறீர்கள். ஆனால் அவ ரைத்தான் காதலிக்கிறேன் என்கிறீர்கள். உங்களுக்குப் பிரச்சினை அவரது தலைமுடி மட்டும்தான் போலும்!

தலைமுடி வளர்த்தவர்கள் ரவுடிகள் என்ற எண்ணம் இருந்த காலம் மலையேறிவிட்டது. உங்களுக்கு அது பிடிக்கவில்லை என்று வேண்டுமானால் சொல்லுங்கள்.

அவருக்கு வேலை இல்லை என்கிறீர்கள். பின் எப்படி உங்கள் பெற்றோர் அவருக்கு உங்களைத் திருமணம் செய்துவைக்க விரும்புகிறார்கள் என்றுதான் புரியவில்லை.

ஒருவேளை அவர் பணக்காரராக இருக்கக்கூடும். அது மட்டுமன்றி அவர் உங்களது உறவுமுறைக்காரர் கூட. எதிர் காலத்தில் ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட்டால் அதைச் சுமுகமாகத் தீர்த்துக்கொள்ள முடியும் என்று உங்கள் பெற் றோர்கள் எண்ணுகிறார்கள் போலும்.

ஒன்றைத் தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள். நீங்கள் அவரை விரும்புகிறீர்கள். அவர் உங்களை விரும்புகிறாரா என்பதை முதலில் தெரிந்துகொள்ளுங்கள்.

அவரும் உங்களை விரும்பும் பட்சத்தில், அவரிடமே அவரது தலைமுடி பற்றிய உங்களது எண்ணத்தைச் சொல்லி விடுங்கள்.

அப்படியே, திருமணத்தின் பின் உங்கள் இரு வரது மணவாழ்க்கையும் எப்படி இருக்கப்போகிறது என்பது பற்றி அவரிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.

அதாவது, அவர் என்ன வேலைக்குச் செல்லப்போகிறார், உங்களை வைத்து எப்படிக் காப்பாற்றப் போகிறார் என் பதைத் தெரிந்துகொள்ளுங்கள். 

அவர் உங்களை விரும்புவது உண்மை என்றால், உங்களுக்காகத் தன் தலைமுடியைத் தியாகம் செய்யத் தயங்கமாட்டார்.

அதேவேளை, உங்களது கூற்றில் இருக் கும் உண்மையை உணர்ந்து வேலைக்குக் செல்வது பற்றி குறைந்தபட்சம் சிந்திக்கவாவது செய்வார்.

உங்களுக்கு அவரைப் பிடித்திருக்கிறது.

வீட்டி லும் சம்மதம் என்றால், தயங்காமல் திருமணம் செய்து கொள்ளுங்கள்.

ஒருவேளை, உங்கள் பெற்றோர் சொல்வது போல, திருமணத்தின் பின் அவர் ஆளே மாறி உங்களுக்குப் பிடித்தவாறு நடந்துகொள்ளவும் வாய்ப்புள்ளது.