அந்தரங்கம் அறிவோம் : இரவில் நித்திரையின்போது எனது வாயில் இருந்து அதிகளவு உமிழ்நீர் வடிகிறது. இது ஏதேனும் நோயா? இதைக் கட்டுப்படுத்த முடியுமா?

March 01,2016

பல மருந்துகளைப் பாவித்தும் பயனில்லை.இதனால் மனம் நொந்துபோயிருக்கிறேன்.

கேள்வி: நான் 30 வயது ஆண். இரவில் நித்திரையின்போது எனது வாயில் இருந்து அதிகளவு உமிழ்நீர் வடிகிறது. இது ஏதேனும் நோயா? இதைக் கட்டுப்படுத்த முடியுமா? பல வைத்தியர்களைச் சந்தித்தும் இந்தப் பிரச்சினை தீரவில்லை. நான் திருமணம் செய்துகொள்ளவிருக்கிறேன்.

இதனால் மனம் நொந்துபோயிருக்கிறேன். பல மருந்துகளைப் பாவித்தும் பயனில்லை. இதற்கு ஒரு நல்ல முடிவு தாருங்கள்.

பதில்: இது பலருக்கும் இருக்கின்ற சாதாரண பிரச்சினைதான். ஆனால் எல்லோருடைய பிரச்சினையும் சாதாரணமானதல்ல.

விழித்திருக்கும்போதோ, தூங்கும்போதோ உமிழ்நீர் வடிவதை ‘சியல்லோரியா’ என்று மருத்துவத்துறை குறிப்பிடுகிறது.

வழக்கத்தைவிட அதிகளவு உமிழ்நீர் சுரப்பது என்று இதற்குப் பொருள்.

குழந்தைகளிடத்திலும், தசைப் பிரச்சினைகள் உள்ள சிறுவர்களிடமும், ‘செரிபரல் பால்சி’ எனப்படும் நரம்பு தொடர்பான பிரச்சினைகள் உள்ள சிறுவர்களிடமும் இந்தப் பிரச்சினையை நீங்கள் அவதானிக்க முடியும்.

பொதுவாக நாம் விழித்திருக்கும் வேளையில் சுரக்கும் உமிழ்நீரைவிடவும், தூங்கும்போது சுரக்கும் உமிழ்நீரின் அளவு குறைவு.

விழித்திருக்கும் நிலையில் உருவாகும் உமிழ்நீரை நீங்கள் விழுங்கிவிடுகிறீர்கள்.

ஆனால் நீங்கள் தூங்கும்போது உங்கள் முகத் தசைகளும் செயலிழந்துவிடுவதாலேயே தூக்கத்தின்போது உமிழ் நீர் வடிகிறது.

அதேநேரம், நீங்கள் பக்கவாட்டில் ஒருக் களித்துத் தூங்கும்போது மட்டுமே இந்தப் பிரச்சினை இருப்பதையும் நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். 

உங்களது பிரச்சினைக்குக் காரணங்களாகச் சிலவற்றைக் குறிப்பிடலாம். ஒன்று, நீங்கள் உட்கொள்ளும் உணவு உங்களுக்கு அதாவது உங்கள் உடலுக்கு ஒவ்வாததாக இருக்கலாம்.

இதனால் உமிழ்நீர் சுரப்பு அதிகமாக இருக்கலாம். அல்லது உங்களுக்கு ‘அசிடிட்டி’ அதாவது, குடலில் சுரக்கும் அமிலம் உணவுக் குழாய் வழியே மேலே வரும் பிரச்சினை இருந்தாலும் உமிழ்நீர் சுரக்கலாம்.

தொண்டைச் சதை வளர்ச்சி, அதாவது ‘டொன்சிலிட்டிஸ்’ இருந்தாலும் இந்த நிலை ஏற்படலாம். 

மேலும், தூக்கத்தின்போது கனவுகளாலோ அல்லது வேறேதும் காரணங்களாலோ பயப்படுபவர்களுக்கும், மது அருந்துபவர்களுக்கும் அதீத மன அழுத்தத்துக்கு உள்ளாபவர்களுக்கும் இதேபோல உமிழ்நீர் சுரக்கலாம். 

இந்தப் பிரச்சினைக்கு எளிய தீர்வாக, மல்லாந்து படுத்தல், தலையை உயர்வாக வைத்திருக்கும் நிலையில் படுத்தல் என்பன கைகொடுக்கும்.

விழித்திருக்கும் நிலையில் மூக்கால் சுவாசிக்கப் பழகுங்கள். ஆழ்ந்து சுவாசிக்கப் பழகுங்கள்.

காது, மூக்கு, தொண்டை நிபுணர் அல்லது ஒவ்வாமை நிபுணரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.