அந்தரங்கம் அறிவோம் : திருமணம் செய்யும்போது எனது கற்பு பறிபோயிருக்குமா? எனக்கு இரத்தக்கறை படாதா? நான் கெட்ட பெண்ணா?

03-03-2016

கேள்வி: என்னைப் பற்றித் தவறாக நினைக்க வேண்டாம். நீண்ட நாட்களாக எனது மனதில் பதில் தெரியாத கேள்வி ஒன்று இருக்கிறது. நான் ஒரு பெண். எனக்கு வயது 19. நான் ஒருவரைக் காதலிக்கிறேன். அவரும்தான். எனது 9 வயதில் என் மாமா என்னைக் கெடுத்துவிட்டார். அப்போது அது பற்றி எனக்குத் தெரியாது. 14 வயதில் பூப்படைந்த பின்தான் எனது பிரச்சினை எனக்கே தெரியவந்தது. நான் இனித் திருமணம் செய்யும்போது எனது கற்பு பறிபோயிருக்குமா? எனக்கு இரத்தக்கறை படாதா? நான் கெட்ட பெண்ணா? எனது காதலர் கற்பு பற்றி அடிக்கடி பேசுவார். அப்போதெல்லாம் எனக்கு மிகுந்த வேதனையாக இருக்கும். தயவு செய்து பதில் சொல்லுங்கள். 

பதில்: பதறாதீர்கள். கற்பு என்பது கன்னித் திரையில் இல்லை. அது மனம் சம்பந்தப்பட்டது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். சிறு வயதில் உங்களுக்கு நடந்தது ஒரு விபத்து. அதற்கு நீங்கள் எவ்விதத்திலும் காரணம் இல்லை. எனவே, நீங்கள் கெட்டவரோ, கெட்டுப்போனவரோ இல்லை.
அடுத்து, ஒன்பது வயதில் நடந்த அந்தச் சம்பவத்தால் நீங்கள் எண்ணும் அளவுக்கு பிரச்சினைகள் ஒன்றும் வராது. ஏனெனில், அந்த வயதில் முழுமையான உறவில் உங்களை யாரும் ஈடுபடுத்தியிருக்க முடியாது. எனவே, கன்னிச்சவ்வு பாதிப்படைந்திருப்பதற்கு வாய்ப்புகள் ஏதும் இல்லை.
அடுத்து, முதலிரவில், முதலுறவில் இரத்தம் வருவதை வைத்து அவளது கற்பைத் தீர்மானிப்பது முட்டாள்தனம். 

அப்படியே இரத்தம் கசிந்தாலும், அவளது மனதில் வேறு ஆணை நினைத்திருந்தால் அவள் கற்புடையவள் என்று சொல்லிவிட முடியுமா?
இதைப் பற்றி எண்ணிக் கலங்கவேண்டாம். உங்கள் திருமண வாழ்க்கையில் எந்தப் பிரச்சினையும் வராது. பயப்படாதீர்கள்.
ஆனால்... இது கல்விப் பருவம். இந்தப் பருவத்தில் காதல் கொள்வது சகஜமாகிவிட்டாலும், அது மிகத் தவறானது. ‘அந்தரங்கம்’ பகுதியைத் தொடர்ந்து வாசித்து வருபவர்களுக்குத் தெரியும், எத்தனை இளம் பெண்கள் காதல் என்ற பெயரில் தமது வாழ்க்கையைச் சிதைத்துக்கொள்கிறார்கள் என்று. ஆகையால் தயவு செய்து உங்கள் காதலை இன்னும் சில வருடங்களுக்கு ஒத்திப்போடுங்கள். உங்கள் காதல் உண்மையானதாக இருந்தால், அந்த இடைவெளி உங்கள் காதலை உறுதிப் படுத்த உதவும்.