குழந்தைகளுக்கான நோய் தடுப்பு மருந்துகள்

September 15,2017

குழந்தைகள் வயிற்றுப்போக்கு, சளி, இருமல், காய்ச்சல் இவற்றால் அடிக்கடி சோர்ந்துவிடுவது உண்டு. உணவு வயிற்றுக்கு ஒப்புக்கொள்ளாமல்போவது, செரிமானப் பிரச்சனை, வயிற்றில் பூச்சி போன்ற காரணங்களால் வயிற்றுப்போக்கு ஏற்படலாம். குழந்தைகள் எதைக் கண்டாலும், அதை உடனே வாயில் வைத்துக்கொள்வார்கள்.
அதனால், கிருமிகள் வயிற்றில் சென்று, பிரச்சனையை ஏற்படுத்திவிடும். சர்க்கரை மற்றும் உப்பை நீரில் கலந்து கொடுத்தால், உடலில் இருக்கும் கழிவுகளும் கிருமிகளும் வெளியேற்றப்படும். வயிற்றுப்போக்கும் சரியாகும். அதிகக் குளிர்ச்சி, தொற்றுநோய் இருந்தாலும் காய்ச்சல் வரும். பல்வேறு நோய்களுக்குத் தண்ணீரே முக்கியக் காரணம்.

அதனால், தண்ணீரை நன்றாகக் காய்ச்சி, ஆறவைத்து, வடிகட்டிக் கொடுப்பது அவசியம். தொற்று நோய்களால் மூக்கு ஒழுகுதல், இருமல், காய்ச்சல் போன்றவை ஏற்படும். இவை நீடித்தால், பிற்காலத்தில் குழந்தைகளுக்கு ஆஸ்துமா உள்ளிட்ட தேவையற்ற பிரச்சனைகள் வர வாய்ப்பு இருக்கிறது. சுற்றுப்புறத்தைச் சுகாதாரத்துடன் வைத்துக் கொள்வது நல்லது. குழந்தைகளுக்கு அணிவிக்கும் டயபர்களால்கூட சளி ஏற்படலாம். சிறுநீர் கழித்ததும், உடனுக்குடன் கவனித்து, மாற்றவேண்டியது அவசியம்.

டயபரை அடிக்கடி மாற்றாமல் போகும்போதும், இறுக்கமாக அணிவிக்கும்போதும் குழந்தைகளுக்குச் சருமத்தில் அரிப்பு ஏற்படலாம். டயபரைக் குழந்தைக்குப் போடும்போதே, அதன் கால் இடுக்குப் பகுதியில் பேபி ஆயில் அல்லது தேங்காய் எண்ணெய் தடவிவிட்டுப் போடுங்கள். இதனால், குழந்தைக்கு அரிப்பு, அலர்ஜி ஏற்படாமல் இருக்கும்.

நோய் தடுக்கும் மருந்துகள்…
* குழந்தை பிறந்தவுடன் மருத்துவமனையிலேயே மருந்துகள், தடுப்பு ஊசிகளைப் போட்டுவிடுகிறார்கள். அவை என்ன தடுப்பு ஊசி, என்ன மருந்து என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.
* குழந்தை பிறந்ததும், காசநோய் (பி.சி.ஜி), போலியோ சொட்டு மருந்து, ஹெபடைடிஸ் பி முதல் டோஸ் போடவேண்டும்.
* ஒன்றரை மாதத்தில், டிபிடி (தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், ரண ஜன்னி தடுப்பு ஊசி) மற்றும் போலியோ சொட்டு மருந்து, ஹெபடைடிஸ் பி இரண்டாவது டோஸ்.
* மூன்றரை மாதத்தில் டிபிடி மற்றும் போலியோ சொட்டு மருந்து.
* நான்கரை மாதத்தில் போலியோ சொட்டு மருந்து.
* ஐந்தரை மாதத்தில் போலியோ சொட்டு மருந்து, ஹெபடைடிஸ் பி மூன்றாவது டோஸ்.
* ஒன்பதாவது மாதத்தில் தட்டம்மை தடுப்பு ஊசி மற்றும் போலியோ சொட்டு மருந்து.
குழந்தைகளுக்குப் போடப்படும் தடுப்பு ஊசிகள்…
* ஒன்றே கால் வயதில் தட்டம்மை, ஜெர்மன் தட்டம்மை, புட்டாளம்மை தடுப்பு ஊசி
* ஒன்றரை வயதில் டிபிடி
* நாலரை வயதில் டிபிடி மற்றும் போலியோ சொட்டு மருந்து.
இப்படி அந்தந்தக் காலக்கட்டத்தில் கட் டாயம் நோய் தடுப்பு ஊசி, மருந்துகளைப் போடுவதன் மூலம், வருங்காலத்தில் குழந்தைகள் நோய் நொடி இல்லாமல் ஆரோக்கியமாக வளர்வது நிச்சயம்.