எண்ணங்களை மாற்றுங்கள் எதிர்காலம் மாறும்!

April 07, 2016


‘என் வாழ்க்கை ஏன் இப்படி இருக்கிறது?  எனக்கு  மட்டும் ஏன் இவ்வாறெல்லாம் நடக்கிறது? எல்லாமே என் தலையெழுத்து...’ என, சிலர் விரக்தியுடன் புலம்புவதுண்டு.

இம்மாதிரியான நபர்கள், தமக்கு நேரிடும் பாதிப்புகளுக்கு வேறு யாரோ ஒருவர் அல்லது ஏதோ ஒன்றுதான் காரணம் என பழிபோட்டு தப்பிக்க முயற்சிக்கின்றனர்; உண்மை அவ்வாறில்லை!

நாம் அன்றாட வாழ்வில் எதிர்கொள்ளும் வெற்றி, தோல்விகள், சவால்கள், பிரச்சினைகள், துயரங்கள் என அனைத்திற்கும் நம் மனதில் தோன்றும் எண்ணங்களே அடிப்படைக் காரணிகள்.

ஒரு விமான பயிற்சி நிறுவனம், கல்லூரி மாணவர்கள் 100 பேரை தெரிவு செய்து, ‘பைலட்’ பயிற்சி அளித்தது. ஒரே மாதிரியான பயிற்சி கையேட்டையே வழங்கியது.

பயிற்சியாளர்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான பயிற்சியே அளிக்கப்பட்டது. அது ஓராண்டு பயிற்சித் திட்டம். இருந்தபோதிலும் ஆறு மாதத்திலேயே 30 பேர் பயிற்சியை சிறப்பாக முடித்தனர்.

சிலர் இரண்டாண்டு கடந்தும் தேர்ச்சி பெற முடியவில்லை.

சிலர் பாதிக் கட்டத்திலேயே ஓடிவிட்டார்கள். இதற்கு காரணம் அவர்களது விதியோ கண்ணுக்கு புலப்படா சக்திகளின் சதியோ அல்ல! வெற்றி பெற்ற மாணவர்கள் எடுத்துக்கொண்ட இலட்சிய எண்ணமும் தீவிர பயிற்சியும் விடாமுயற்சியும் தோல்வி கண்டவர்களிடம் இல்லை!

ஒருவரது வாழ்வில் வெற்றி, தோல்வியைதீர்மானிப்பது அவரது சமூக, பொருளாதார வசதிகள் அல்ல.

மனதில் தோன்றி மறையும் எண்ணங்களே! வாகனத்தை எப்படி எரிபொருள் இயக்குகிறதோ, அதே போன்றுதான், நித்தம் நித்தம் நம் மனதில் தோன்றி மறையும் எண்ணங்கள் நம்மை இயக்குகின்றன.

ஒரு நிலையில் இருந்து அடுத்த நிலைக்கு நம்மை தள்ளிச் செல்கின்றன. தோன்றும் எண்ணங்கள் நல்லவையாக இருப்பின், வாழ்வின் நகர்வும் நற்பயனை நோக்கி இருக்கும். தீயதாக இருப்பின், தீங்கிழைக்கும்!

‘எண்ணங்கள்’ என்ற அஸ்திபாரத்தின் மீதே ‘எதிர்காலம்’ எனும் கனவுமாளிகை கட்டி எழுப்பப்படுகிறது. எனவே, எண்ணங்களை நல்லவையாக மாற்றுங்கள். அது உங்களின் எதிர்காலத்தையே மாற்றும்; பிரகாசமாக்கும்!