துருக்கிய புரட்சி குறித்த சர்ச்சைக்குரிய டுவிட்டால் அழகுராணி பட்டத்தை இழந்த யுவதி

September 26, 2017

துருக்கிய அழகுராணியாக தெரிவுசெய்யப்பட்ட யுவதியொருவர், டுவிட்டரில் இரு மாதங்களுக்கு முன்னர் அவர் வெளியிட்டிருந்த கருத்தின் காரணமாக அழகுராணி பட்டத்தை பறிகொடுத்துள்ளார்.
 
18 வயதான இத்திர் எசென் எனும் இந்த யுவதி மிஸ் துருக்கி 2017 அழகுராணி போட்டியில் பங்குபற்றினார். கடந்த 22  ஆம் திகதி துருக்கியின் இஸ்தான் புல் நகரில் நடைபெற்ற இறுதிச் சுற்றில், மிஸ் துருக்கி 2017 அழகுராணியாக அவர் தெரிவுசெய்யப்பட்டார்.
 
இதனால், எதிர்வரும் நவம்பர் மாதம் சீனாவில் நடைபெறவுள்ள உலக அழகுராணி போட்டியில் துருக்கியின் சார்பில் பங்குபற்றுவதற்கு 18 வயதான இத்திர் தகுதி  பெற்றிருந்தார். 
 
 
எனினும், 24 மணித்தியாலங்களுக்குள் அவரின் அழகுராணி பட்டம் பறிக்கப்படுவதாக துருக்கிய அழகுராணி போட்டி ஏற்பாட்டாளர்கள் அறிவித்தனர்.
 
அழகுராணியாக தெரிவு செய்யப்படுவதற்கு இரு மாதங்களுக்கு முன்னர், துருக்கிய மாவீரர் தினம் குறித்து இத்திர் எசென் டுவிட்டரில் வெளியிட்டிருந்த பதிவொன்றே இதற்குக் காரணம்.
 
ஜனாதிபதி தாயீப் ஏர்டோகன் தலைமையிலான துருக்கிய அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு கடந்த வருடம் ஜூலை 15 ஆம் திகதி இராணுவத்தினரில் ஒரு பகுதியினர் மேற்கொண்ட புரட்சி தோல்வியில் முடிவடைந்தது. இப்புரட்சி யின்போது, சுமார் 250 பேர் உயிரிழந்ததுடன் 2000 பேர் காயமடைந்தனர்.
 
இப்புரட்சியை முறியடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு உயிரிழந்த படையினரை நினைவுகூரும் வகையில் கடந்த ஜூலை 15 ஆம் திகதி மாவீரர் தினமாக அனுஷ்டிக்கப்பட்டது.
 
இதுதொடர்பாக டுவிட்டரில் பதிவொன்றை செய்த இத்திர் எசென், மாவீரர்களின் சிந்திய இரத்தத்தையும் தனது மாதவிடாய் இரத்தத்தையும் ஒப்பிட்டிருந்தார்.
 
''ஜூலை 15 ஆம் திதகி மாவீரர் தினத்தன்று காலையில் எனக்கு மாதவிடாய் ஏற்பட்டது.
 
 மாவீரர்களை பிரதிநிதித்துவப்படுத் துபவர்களைப் போன்று நானும் இரத்தம் சிந்தினேன்'' என  இத்திர் எசென் தெரிவித்திருந்தார்.
 
இத்திர் எசென் அழகுராணியாக தெரிவானவுடன் இவ்விடயம் சர்ச்சையை ஏற்படுத்தியது.  அதையடுத்து அவரின் அழகுராணி பட்டம் பறிக்கப்படுவதாக போட்டி ஏற்பாட்டாளர்கள் கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தனர். 
 
இத்திர் எசெனின் கிரீடம், மேற்படி போட்டியில் இரண்டாமிடம் பெற்று, பிரபஞ்ச அழகுராணி போட்டியில் துருக்கியின் சார்பில் பங்குபற்றவிருந்த அஸலி சுமெனுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இதனால் எதிர்வரும் உலக அழகுராணி போட்டியில் துருக்கியன் சார்பில் அஸ்லி சுமென் பங்குபற்றவுள்ளார்.
 
3 ஆம் இடம் பெற்று மிஸ் சுப்பர்நெஷனல் போட்டியில் துருக்கியின் சார்பில் பங்குபற்றவிருந்த பினார் தார்டென் மிஸ் யூனிவர்ஸ் போட்டியில் பங்குபற்றவுள்ளார்.
 
 தனது நடவடிக்கைக்காக மன்னிப்புக் கோருவதாக இத்திர் பின்னர் தெரிவித்தார்.
 
இத்திர் எசெனின் கிரீடம் பறிக்கப்பட்டு தனக்கு அணிவிக்கப்பட்டமை குறித்து 23 வயதான அஸ்லி சுமென் கருத்துத் தெரிவிக்கையில், ''இது முற்றிலும் ஏற்பாட்டாளர்களின் தீர்மானமாகும், நான் எனது கடமையை சரியாக செய்வது குறித்து கவனம் செலுத்துகிறேன்'' எனத் தெரிவித்துள்ளார்.
 
துருக்கியின் முன்னாள் அழகுராணி மேர் புயுக்ஸ்சரக், அந்நாட்டு ஜனாதிபதியை விமர்சிக்கும் கவிதையொன்றை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தமைக்காக 2015 விசாரிக்கப்பட்டார்.
 
 அவருக்கு 14 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது