ஆண்களே வித்தியாசமான Smart Dressing Tips

November 30, 2015Casual Dress

சில நேரங்களில் நம்ம பசங்க போட்டுட்டு வர உடையை பார்த்தால் செம்ம டென்ஷன் ஆகிடுவேன்.. என்னய்யா உங்க ரசனை?

இப்படி மஞ்ச மாக்கான் மாதிரி ஒரு உடையைப் போட்டுட்டு திரியறீங்க என்று கோபமாக வரும். நம்ம இனத்தையே டேமேஜ் பண்ணுறீங்களே என்று ஆத்திரமாக வரும் 

பின்ன என்னங்க பசங்கனா ஒரு ஸ்மார்ட்டா இருக்க வேண்டாமா! ஒரு ரிசப்சன் போறோம் அல்லது சிறு விழாவிற்குப் போகிறோம் என்றால், உடனே கஞ்சி போட்டு அயர்ன் பண்ணுன ஒரு மொட மொட னு ஒரு சட்டையை எடுத்து மாட்டிட்டு முழுக்கைச் சட்டையாக இருந்தால் கையைக்கூட மடித்து விடாமல் அலுவலகத்துக்கு போகிற மாதிரி ஒரு கெட்டப்புல வந்து ஹி ஹி னு நின்னுட்டு இருப்பாங்க.

ஏன்டா! ரிசப்னுக்கு தானே வந்து இருக்கீங்க என்னமோ ஐ நா சபைல இந்தியா சார்பா பேசப்போகிறவன் மாதிரி (விஷயம் ஒன்றுமில்லை என்றாலும்) முறுக்கிக்கிட்டு வந்து நிற்கறீங்க! என்று கடுப்பாக இருக்கும்.

இதே குடும்பஸ்தன் என்றாலும் கல்யாணத்தில் இதே மாதிரி வந்து நிற்பார்கள்.. (கிராமம் என்றால் வேறு வழி இல்லை) விட்டா டையும் சேர்த்துக் கட்டிக்கிட்டு வருவாங்க போல இருக்கு. என்னய்யா மேட்டருன்னு கேட்டா டீசன்ட்டாம்! அது சரி.
 

ஜீன்ஸ்

இந்த உடை இருக்கு பாருங்க.. இதை அடித்துக்க உலகத்துலையே எதுவும் கிடையாது.

அது பெண்களுக்காக இருந்தாலும் சரி ஆண்களுக்காக இருந்தாலும் சரி இதற்கு என்று உள்ள மதிப்பே தனி.

அடிக்கடி துவைக்க வேண்டிய அவசியமில்லை  அணிந்து கொள்ள எளிது பெரும்பாலான சட்டைகளுக்கு பொருத்தமாக இருக்கும்.

அதை விட உங்கள் வயதைக் குறைத்துக்காட்டும் அதைவிட முக்கியமாக உங்கள் அருகில் உள்ளவர்கள் கொஞ்சம் ரிலேக்சாக இருக்க முடியும்.

ப்ரொஃபசனலா உடை அணிந்து இருந்தீர்கள் என்றால் டேய்! மச்சி இவரு கணக்கு மாஸ்டர் மாதிரி இருக்காருடா! நம்மை வாய்ப்பாடு சொல்லச் சொல்லி கேட்பாரு போல இருக்கு கொஞ்சம் தள்ளியே உட்கார்ந்துக்க என்று பயப்படும் படி ஆகி விடும்  .

நாம் என்னதான் ஜாலி டைப்பாக இருந்தாலும் நம்முடைய தோற்றம் தான் முதலில் அருகில் இருப்பவர்களுக்கு எந்த வித எண்ணத்தையும் தோற்றுவிக்கும்.
 

டி ஷர்ட் & காட்டன் ஷர்ட்

ஜீன்ஸ் க்கு 100% பொருத்தமானது என்றால் யோசிக்காமல் டி ஷர்ட் என்று கூறலாம் அல்லது காட்டன் ஷர்ட்டை கூறலாம். நான் கூறிய அலுவலகம் தவிர மற்ற இடங்களுக்கு செல்லும் போது.

எடுத்துக்காட்டாக ரிசப்சன், திருமணம், நண்பர்கள் பார்ட்டி, சுற்றுலா, பிறந்தநாள் விழா, திரையரங்கு, கடற்கரை இதைப்போல இடங்களுக்கு சரியான தேர்வு ஜீன்ஸ் + டி ஷர்ட் அல்லது காட்டன் ஷர்ட் மட்டுமே.

டி ஷர்ட்டில் காலர் வைத்தது காலர் வைக்காதது அவரவர் தனிப்பட்ட விருப்பத்தை பொறுத்தது. எடுத்துக்காட்டாக, திருமணங்களுக்கு செல்லும் போது காலர் வைத்த டி ஷர்ட் அணிந்து செல்வது நாகரீகமா இருக்கும்.

காலர் வைக்காத டி ஷர்ட்டையும் அணிந்து செல்லலாம் இருப்பினும் அது அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது.

டி ஷர்ட் அணிவது என்றால் நம்மில் பெரும்பாலனவர்களுக்கு உள்ள மிகப்பெரிய பிரச்சனை தொப்பை. அவங்களுக்கு முன்னாடி அவங்க தொப்பை போயிட்டு இருக்கும்  இவங்க காட்டன் டி ஷர்ட்டை உபயோகப்படுத்தி இதில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம்.

தயவு செய்து தொப்பை இருந்தால் உடற்பயிற்சி செய்தாவது குறையுங்க இப்படி நம்ம இனத்தின் மானத்தை வாங்காதீங்க  .

நானும் பல நாட்டு மக்களை பார்த்துட்டேன் நம்ம பசங்க தான் தொப்பையோட குறிப்பா தென் மாநிலத்தை சேர்ந்தவர்கள் தான் இப்படி சுற்றிக்கொண்டு டென்ஷன் பண்ணுறாங்க.

சரி! சட்டையை இன் (In) செய்வதாவது ஒழுங்கா செய்கிறார்களா என்றால் அதுவுமில்லை.

ஒரு ஒழுங்கே இருக்காது சட்டையை பேன்டுக்குள்ள போட்டு திணித்து வைத்ததைப்போல பெப்பரப்பேன்னு நின்னுட்டு இருப்பாங்க.

சீராக இல்லாமல் அங்கங்கே ஏற்ற இறக்கமாக இருக்கும்.

அலுவலக உடை

நீங்க எத்தனை பேன்ட் வைத்து இருந்தாலும் நீங்கள் தவறாமல் வைத்து இருக்க வேண்டிய பேன்ட் கருப்பு வண்ணமாகும்.

எந்த சட்டைக்கும் பொருந்தக்கூடிய ஒரே வண்ணம் இது தான் (வெள்ளை சட்டை தவிர்த்து).

அலுவலகத்திற்கு செல்பவர்கள் ப்ரைட்டான சட்டைகளை அதிகம் பயன்படுத்துங்கள் டார்க்கான சட்டை நம்மை டல்லாக காட்டும்.