மித்திரனின் பொன்விழா - அன்னலட்சுமி இராஜதுறை

06 - 03 - 2016

மக்கள் மனதில் நீங்காத இடம் பெற்றிருந்த மித்திரனும் இன்றும் சிறப்பான சேவையாற்றும் மித்திரன் வாரமலரும் மக்களின் தேவைகளே புதிய கண்டுபிடிப்புகளின் தாய் எனக் குறிப்பிடுவார்கள். இது நூற்றுக்கு நூறு வீதமும் உண்மையான வார்த்தையாகும். அரசியல், சமூகம், பொருளாதாரம், கலை, இலக்கியம், அறிவியல் ஆகிய பல்வேறு துறைகளிலும் புதிய கண்டுபிடிப்புகளும் அதன் விளைவாக அபிவிருத்திகளும் ஏற்பட மக்களது தேவைகளே அடிப்படையாக அமைந்தது.

19ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் வருகையைத் தொடர்ந்து அச்சு இயந்திரம் அறிமுகம் செய்யப்பட்டதை அறிவோம். ஆங்கிலக் கல்வியையும் கிறிஸ்தவ மதத்தினையும் மக்களிடையே பரப்பும் முகமாக இந்த அச்சு இயந்திரத்தைப் பயன்படுத்தி கிறிஸ்தவ மிஷனரிமாரால் பத்திரிகைளும் சஞ்சிகைகளும் அச்சடித்து வெளியிடப்பட்டன. அதேசமயம் இந்து சமயத்தினர் தமது சமயத்தைப் பரப்பும் பொருட்டு இந்துசாதனம் பத்திரிகையை வெளியிட்டதும் இதனைத் தொடர்ந்து வேறுசில சமயப் பத்திரிகைகளும் சஞ்சிகைகளும் தோன்றியமையும் தெரிந்ததே.

 

சமய அறிவைப் பெற்றிருத்தல் மட்டும் மக்களின் ஒரு பிரதான விடயமாகத் தொடர்ந்திருக்கமுடியாது. சமயம் சாராத பல்வேறு விடயங்களையும் அதாவது நாட்டின் அரசியல், சமூக, பொருளாதார, கலை, கலாசார விடயங்கள் குறித்தும் மக்கள் அறிந்து கொள்ள வேண்டிய தேவை அக்காலக்கட்டத்தில்தான் பெரிதும் உணரப்பட்டது. எனவே பத்திரிகைகளின் தேவை அத்தியாவசியம் எனக் கருதப்பட்டது.

 

இத்தகையதொரு சூழலில்தான் 1930 இல் ஈழகேசரியும் வீரகேசரியும் தோற்றம் பெற்றன. 1952இல் தினகரன் வெளியானது. யாழ்ப்பாணத்தில் இருந்து ஈழநாடு 1959இல் வெளிவந்தது. கொழும்பில் இருந்து வெளிவந்த சுதந்திரன் பத்திரிகையும் சிலகாலம் புகழுடன் விளங்கி பின்னர் நின்றுவிட்டதும் தெரிந்ததே.

 

1930ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6ஆம் திகதி திரு. பெ.பெரி சுப்பிரமணியம் செட்டியாரினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட வீரகேசரி நாளிதழ் செட்டியார் அவர்களின் எழுத்தில் ஒரு பிரகடனத்தையும் கொண்டு வெளியானது. அப்பிரகடனத்தில் தமிழ் மக்களுக்கு விசேடமாகவும் இந்நாட்டின் அனைத்து மக்களுக்கும் பொதுவாகவும் தன்னாலியன்ற சேவையினை கேசரி வழங்குவான் எனக் குறிப்பிட்டிருந்தார்.

 

அக்கொள்கையின் படி வீரகேசரி இயங்கி வந்த அதேவேளை 1960 ஆம் ஆண்டு காலத் தசாப்தத்தின் முற்பகுதி சூழலையும் நினைவு கூர்தல் பொருத்தமாகும்.

 

இக்காலக்கட்டம் அரசியல், சமூகம், கலை, இலக்கியம், சினிமாத்துறை என்பவற்றில் ஒரு முனைப்புப் பெற்ற காலமாக விளங்கியமை குறிப்பிடத்தக்கது. அரசியல் ரீதியில் நோக்கினும் 1958ஆம் ஆண்டு ஏற்பட்ட இனக்கலவரத்தினைத் தொடர்ந்து தமிழரசுக் கட்சியின் எதிர்ப்புக் குரல்கள் சத்தியாக்கிரகம் என அரசியல் நடவடிக்கைகளும் முனைப்புப் பெற்று தொடர்ந்த வண்ணம் இருந்தன.

 

சமூக நிலையை நோக்கின் இலவசக்கல்வி தாய் மொழிமூலப் போதனை ஆண்களுடன் பெண்களும் குறிப்பிடத்தக்க அளவு கூடுதல் கல்வி அறிவினைப் பெற்று முன்னேறுகின்ற ஒரு சூழ்நிலையும் ஏற்பட்டிருந்தது. அதேவேளை கலை இலக்கிய உணர்வும் முயற்சியும் வீறுகொள்ளத் தொடங்கியிருந்தன. முற்போக்கு எழுத்தாளர் சங்கம் முற்போக்குக் கொள்கைகளை வலியுறுத்தி இலக்கியம் படைக்க முற்பட்ட காலமும் இதுவேயாகும்.

 

அதேவேளை நம் நாட்டு மக்களின் வாசிப்புப் பழக்கம் உன்னத நிலைக்குச் சென்றது என்றே குறிப்பிடலாம். இதற்குக் காரணமாக விளங்கியவை தமிழகத்தில் இருந்து இங்கு வந்த பிரதான சஞ்சிகைகளான கல்கி, கலைமகள், குமுதம், ஆனந்தவிகடன், அமுத சுரபி, மஞ்சரி ஆகியனவும் அத்தாபனங்கள் வெளியிட்ட தீபாவளி மலர்களும் ஆகும். இவை வாசகர் தொகையை கணிசமாக பெருக்கின.

 

இச்சஞ்சிகையில் வெளிவந்த சமூக சரித்திரக் கதைகள் இங்கு பெரும் வரவேற்பைப் பெற்றவையாக விளங்கின. இவற்றில் தொடர்கதைகளை எழுதிய எழுத்தாளர்களான கல்கி சாண்டில்யன், ஜெகசிற்பியன், அகிலன், மாயாவி, மணிவண்ணன், ஜெயகாந்தன்,        லக் ஷ்மி, ஆர்.சூடாமணி, ராஜம் கிருஸ்ணன் போன்றோர் பெரும் புகழ் பெற்று விளங்கினார்கள்.

 

அதேபோன்று தமிழ்வாணன், சஞ்சீவி போன்ற துப்பறியும் எழுத்தாளர்கள் எழுதிய துப்பறியும் கதைகளை வாசிக்க ஆவல் கொண்ட வாசகர்களும்  கணிசமாகப் பெருகியிருந்தனர். அவ்விதமே தினத்தந்தி போன்ற பரபரப்புச் செய்திகளைத் தாங்கி வந்த செய்திப் பத்திரிகைகளையும் சாதாரண வாசகர்கள் விரும்பி வாங்கி வாசிப்பவர்களாக விளங்கினர். லட்சுமிகாந்தன் என்பவர் நடத்திய இந்துநேசன் பத்திரிகைக்கும் இங்கு நல்ல வரவேற்பு இருந்தது.

 

இலக்கியத்தை நாடும் எழுத்தாளர்களும் இலக்கிய ஆர்வம் படைத்தோரும் இலக்கிய சஞ்சிகைகளான தீபம், எழுத்து, தாமரை, சரஸ்வதி போன்றவற்றை விரும்பி வாசிப்பவர்களாக இருந்தனர். மேலும் நிறையவே நாவல்களும் மற்றும் நூல்களும் தமிழகத்தில் இருந்து இங்கு வந்து கொண்டிருந்தன.

 

இத்தகையதொரு சூழலில் தமது வாசிப்பு ஆர்வத்துக்கு ஏற்ப புதிய புதிய படைப்புக்களை வாசிக்கத் துடிக்கும் வாசகர் எண்ணிக்கையும் பெருகியது. அவ்விதமே தமது எண்ணங்களையும் கருத்துக்களையும் கற்பனைகளையும் எழுத்துப் படைப்பாக்க ஆர்வம் கொண்ட இளம் எழுத்தாளர்கள் தொகையும் அதிகரித்தது.

 

மற்றுமொரு முக்கியமான விடயம் அக்காலக் கட்டத்தில் வேகமாக வீசிய சினிமா அலை ஆகும். பி.யு.சின்னப்பா, எம்.கே.தியாகராஜப்பாகவதர், கே.ஆர்.ராமசாமி ஆகியோரே தொடர்ந்து சினிமா உலகில் மூவேந்தர் எனப் புகழப்பட்ட மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., நடிகர் திலகம் சிவாஜி கணேசன், காதல் மன்னன் ஜெமினி கணேசன் ஆகிய சிறப்பு வாய்ந்த நடிகர்கள் உட்பட திரையுலக விற்பன்னர்களால் உருவாக்கப்பட்ட திரைப்படங்கள் திரைக்கு மளமளவென வரத்  தொடங்கிய காலம்.

 

திரைப்படங்கள் மூலம் நடிப்பு, கதை, இசையமைப்பு, பாடல், கருத்து, காட்சி எனப் பல்வேறு துறைகளிலும் புதிய பரிசோதனைகள் ஆரம்பமாகி ரசிகர்களை மகிழ்வித்ததுடன் கலை இலக்கிய நெஞ்சங்களுக்கு கருத்து கற்பனை என்னும் புதிய இரத்தத்தைப் பாய்ச்சிக் கொண்டிருந்தன என்றே கூறலாம்.

 

அதேவேளை மிகச் சாதாரண மட்டத்தில் எழுத வாசிக்கத் தெரிந்தோர் நாட்டு நடப்புகளை சுருக்கமாக அறிந்து கொள்ளவும், காதல், வீரம், சோகம், பரபரப்பு துப்பறிதல், மர்மம், சினிமா அடங்கிய சுவாரஸ்யமான பொழுதுபோக்கு விடயங்களையும் செய்திகளையும் தொடர்கதைகளையும் வாசிக்க ஆர்வம் காட்டினர்.

 

இத்தகையதொரு பின்னணியில் வீரகேசரி ஸ்தாபனம் மேற்கூறப்பட்ட  விடயங்களையும் கொண்ட மாலைத்தினசரி ஒன்றினையும்  வெளியிடத் தீர்மானித்தது. அதன் பயனாக 1966ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதலாம் திகதி மித்திரன் மாலைத் தினசரியாக பிறந்தான். ஈழத்தின் தமிழ்ப் பத்திரிகை உலகில் இது முதல் முயற்சியாகும்.

 

“ரப்லோயிட் சைஸ்” பத்திரிகையாக வெளிவந்த இந்த மாலைத்தினசரி அன்று காலை இடம்பெற்ற மிக முக்கிய செய்திகளை முற்பக்க செய்திகளாக பரபரப்புத் தலைப்புக்களுடனும் சினிமா நடிகைகளின் அழகிய கவர்ச்சிப் படங்களுடனும் சுடச்சுட நறுக்குத் தெறித்தாற் போல் சிறுசிறு செய்திகளுடனும் மேலும் கடுகுச் செய்திகளுடனும் ஆக பத்து சதத்துக்கு வெளிவந்த போது வாசகர்களிடைளே பெரும் வரவேற்பு!

 

அத்துடன் மித்திரன் ஆரம்ப காலத்தினசரியில் லட்சுமிகாந்தன் கொலை வழக்கு விடயம் ஒரு தொடர்கதையைப் போல விபரமாக சுவையாக எழுதப்பட்டு வந்தபோது அதற்கு தனியானதோர் வரவேற்பு ஏற்பட்டது எனலாம். லட்சுமி காந்தன் என்பவர் யார்? என்பதை இன்றைய கால கட்டத்து வாசகர்கள் அறியாதிருக்கலாம்.

 

இவரின் பெயரை மேலேயும் ஓரிடத்தில் குறிப்பிட்டிருக்கிறோம். இவர் 1950களில் இந்துநேசன் என்றொரு பத்திரிகையை நடத்தி வந்துள்ளார். அக்காலகட்டத்தில் மக்கள் மனதில் பெரிதும் இடம்பிடித்திருந்த சினிமாவில் பிரபல கதாநாயகர்களாகவும் கதாநாயகிகளாகவும் நடிகர்களாகவும் மற்றும் முக்கிய கலைஞர்களாகவும் விளங்கிய சிலரின் தனிப்பட்ட தகாத நடவடிக்கைகளை லட்சுமி காந்தன் நேரம், இடம், காலம் குறிப்பிட்டு மறைமுகமாகத் தமது பத்திரிகையில் எழுதி வந்தார். இதனால் ஆர்வத்துடன் வாசிக்கின்ற வாசகர் கூட்டமும் கணிசமாகவே இருந்தது. அதேவேளை லட்சுமிகாந்தனின் நடவடிக்கைக்கு எதிர்ப்பும் எழுந்த்து.

 

அப்போது ஏழிசை மன்னர் எம்.கே.தியாகராஜபாகவதர் பல்வேறு படங்களிலும் நடித்து புகழின் உச்சக் கட்டத்தில் இருந்தார். அவ்விதமே ஹாஸ்ய நடிகரான என்.எஸ்.கிருஷ்ணனின் புகழும் எங்கும் பரவியிருந்தது. திடீரென ஒருநாள் லட்சுமி காந்தன் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக தியாகராஜபாகவதரும் என்.எஸ்.கிருஷ்ணனும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர். வழக்கில் அவர்கள் குற்றவாளிகளாக காணப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டனர். அதன்பின் அவர்களது சினிமா மார்க்கட் கிட்டத்தட்ட போய்விட்டது.

 

இதைத்தான் மித்திரனில் விபரித்து எழுதினார்கள். இதற்கு பெரும் வரவேற்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து வேறுசில பிரசித்தி பெற்ற வழக்கு விபரங்களும் கதைகளாக வழங்கப்பட்டன.

 

மித்திரன் தினசரிப்பத்திகையை ஆரம்பிப்பதில் அப்போது வீரகேசரியின் இணை ஆசிரியராகக் கடமைப்புரிந்த திரு.கே.சிவப்பிரகாசம் முக்கியப் பொறுப்பேற்றுச் செயற்பட்டார். ஆசிரியர் குழுவில் திரு.சந்திரசேகரன், திரு.எம்.நேசமணி, திரு.எஸ்.சூரியகுமார், திரு கே. நித்தியானந்தன் ஆகியோர் செயற்பட்டனர். பிரதான செய்தி நிருபராக திரு.ஜோன்சன் என்பவர் கடமை புரிந்தார்.

 

பரபரப்பாக வெளிவந்த மித்திரனில் திரு.சந்திரசேகரன் செய்திகளை பரப்பான தலைப்புகளுடன் வெளியிடுவதில் தேர்ந்தவராக விளங்கினார். மித்திரனின் அப்போதைய புகழுக்கு காரணமாக இருந்த மற்றவர் திரு.நேசமணியாகும். நேசன் என்னும் பெயரில் ஒரு புதிய நடையில் இவர் தொடர் கதைகளாக எழுதி வந்த பட்லி ஜமேலா கறுப்புராஜா உட்பட பல தொடர்கதைகள் வாசகர்களைப் பெரிதும் கவர்ந்திருந்தன. இவற்றில் சில பின்னர் வீரகேசரியின் ஜனமித்திரனில் பிரசுரிக்கப்பட்டு நூலாக வெளிவந்தன. இவற்றில் சிலவற்றிற்கு இங்கு படப்பிடிப்புகளும் செய்யப்பட்டு சேர்க்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

 

இதனைத் தொடர்ந்து எமது நாட்டு எழுத்தாளர்கள் பலரின் தொடர்க்கதைகள் மித்திரனில் வெளியாகிக் கலகலப்பூட்டின. ஆரம்பத்தில் வீரகேசரியின் பிரதம ஆசிரியர் கே.வீ.எஸ். வாஸ் நமது ரஜனி என்ற பனைப்பெயரில் பல தொடர்கதை எழுதினார். நெஞ்சத்தனல் மைதிலி கணையாழி அஞ்சாதே அஞ்சுதமே அத்தொடர்கதையில் அடங்கும்.

 

மேலும் எழுத்தாளர் இந்து கேஷின்  விலைமகளைக் காதலித்தேன் என்ற தலைப்பும் கதையும் வாசகர்களிடையே  பிரபலம் பெற்ற ஒன்றாகும். அடுத்து ஜனரஞ்சக எழுத்தாளர் மொழிவாணனின் யாருக்காக தொடர்கதையும் மித்திரனில் பிரசுரமாகி பின்னர் வீரகேசரி பிரசுரமாக வெளிவந்தது. அவ்விதமே இந்த எழுத்தாளர் விடியும் விழித்திரு உட்பட வேறு சில தொடர்கதைகளையும் எழுதியிருந்தார்.

 

எனது “உள்ளத்தின் கதவுகள்” என்ற தொடர்கதையும் மித்திரனில் வெளியானதொன்றே. இதிவும் வீரகேசரி பிரசுரமாகப் பின்னர் வெளிவந்தது.

 

இவ்விதமே மேலும் சில எழுத்தாளர்களது தொடர்கதைகளும் வெளியாகி வாசகர்களின் வாசிப்பு ரசனையை வளர்த்ததை மறக்கமுடியாது. அத்துடன் மக்களை எப்போதும் கவர்ந்திருந்த சினிமாச் செய்திகளும் கட்டுரைகளும் படங்களும் வெளியாகி வாசகர்களைக் குளிர வைத்தன. இதில் ஸ்டார் எழுத்தாளர் மோகனின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. இவர் கண்ணகி மாதவி என்ற பெயர்களில் சினிமா விடயங்களை எழுதினார்.

 

மேலும் ஒரு குறிப்பிடத்தக்க அம்சமாக அமைந்தது. பிரபல கார்ட்டூன் ஓவியர் சுந்தர் அளித்து வந்த  மைனர் மச்சான் ஆகும். இதற்கும் வாசகர்களிடையே நல்ல மதிப்பிருந்தது. இருப்பினும் இப்பத்திரிக்கை 1990 களில் நின்று விட்டது. கொலை, கொள்ளை, பாலியல் சீரழிவு போன்ற சமூக விரோத விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது என மக்களின் ஒரு சாரார் எதிர்ப்புத் தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

1970களில் ஆரம்பிக்கப்பட்டதே மித்திரன்  வாரமலர் ஆகும். அதன் ஆரம்பத்தில் திரு.எஸ்.தியாகராஜா என்ற பத்திரிக்கையாளர் இதற்குப் பொறுப்பாக இருந்து நடத்தினார். இதுவும் மித்திரனின் பாணியைப் பின்பற்றி தொடர்கதைகளையும் சுவாரஸ்யமான கட்டுரைகளையும் சினிமா விடயங்களையும் பிரசுரித்து வாசகர்களின் வாசிப்பு பசிக்குத் தீனி போட்டது. பா.பாலேஸ்வரி, ச.முருகானந்தன், மொழிவாணன், செங்கையாழியான், தெளிவத்தை ஜோசப், எஸ்.எம்.கார்மேகம், பன். பாலா, ராம்ஜி உலகநாதன் எனப் பல எழுத்தாளர்களும் இதில் அப்போது எழுதினர்.

 

பொன் எழுத்தாளர்கள் சிலரின் படைப்புகளும் மித்திரன் வாரமலரில் வெளியாகின. அதில் ஒன்பது பெண் எழுத்தாளர்கள் சேர்ந்து எழுதிய ஒரு குறு நாவலும் குறிப்பிடத்தக்கது. இப்பத்திரிகையின் பொறுப்பாசிரியராக 1978முதல் 1984வரை பணிபுரியும் வாய்ப்பினை நான் பெற்றிருந்தேன். நவீன டிஜிட்டல் தொழில்நுட்பம் நடைமுறைக்கு வந்ததையடுத்து மித்திரன் வாரமலர் மிக அழகிய கண்ணைக் கவரும் அட்டையுடனும் மற்றும் படங்களுடனும் புதுப்புது விடயதானங்களுடனும் தற்போது சிறப்பாக வெளிவந்து கொண்டிருப்பது வாசகர்கள் அறிந்ததே. திருமதி. பொன்மலர் இப்பத்திரிகையின் பொறுப்பாசிரியராகப் பணிபுரிந்து வருகின்றார். தற்போது மித்திரன் வாரமலர் ஒரு மகளிர் வாரப்பத்திரிகையாக வெளிவந்து கொண்டிருக்கிறது.

 

அன்னலட்சுமி இராஜதுறை