பெண்ணின் பெருமை : சிறப்புத் தொகுப்பு....!

March 08,2016

எழுதாத சட்டங்கள் வகுத்து பெண்கள் உலகில் எவ்வாறு வாழ வேண்டும் என்று சொல்லித்தரும் நண்பர்களுடனான சில பகிர்வுகள்.

குழந்தை தொடங்கி கிழவியாய் வாழ்ந்து மடியும் பெண்கள் இன்று  உலகில் யார்? அவளுக்கு நாம் வழங்கும் கௌரவமும் மதிப்பும் தான் என்ன? அவரை உரிய இடத்தில் வைத்துள்ளோமா? என்று நாம் என்றாவது சிந்தித்தது உண்டோ? பெண் விடுதலை, புதுமை பெண்கள் பற்றி பேசும் பலர் அதை தமது வாழ்வில் கடைபிடிப்பதில்லை.

அது ஏன்? மகள், அக்கா, தங்கை, மருமகள், மனைவி, அம்மா, அன்னி, சித்தி, பெரியம்மா, மைத்துனி, அத்தை, நண்பி, காதலி எனும் கதாபாத்திரங்களுடன் நவீன யுகத்தில் துண்டு, பிகர், சைஸ், செட்டப், கீப் என்று பல இழிநிலை கதாபாத்திர நாயகிகளாகவும் வாழ்கிற பெண்களுக்கு நாம் எவ்வாறு மதிப்பளிக்கிறோம்.

சிந்தித்தது உண்டா? வாருங்கள் சிந்திப்போம்! அதை தினம் சிந்திக்காததால் தான் இன்று உலகில் பாலியல் கலாசாரம்.

எனவே இன்றாவது ஒரு நாளை ஒதுக்கி சிந்திப்போம்.

அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு பெண்ணின் குணமாகவும் அழகிய தோற்றம் அவளில் மிகையாகவும் தைரியம், வீரம், சுறுசுறுப்பு, கல்வி, பணிவு அவளின் அணிகலன்களாகவும் எதிர்பார்க்கும் நாம் ஏன் அவளை பெண்மையாய் மதிப்பதில்லை?

உலகில் உயர்வு பெறவும் பட்டம், பதவி, புகழ், பணம் படைத்து உலகம் போற்ற அவளை சுற்றம் மறந்து நடக்க வைத்தது யார்?

மாமி, மருமகள் சண்டை வீட்டில்

மனைவி, சக்காளத்தி சண்டை ரோட்டில்

இதை பற்றி எழுத நிறைய பேனாக்கள் நாட்டில்

அதைவிடுத்து அவள் துயர் துடைக்க யாரும் இல்லை இன்று உலகில்!

அன்னை தெரேசா ஆன்மீக வழிகாட்டி, கல்பனா சௌளா விஞ்ஞான வழிகாட்டி. இன்னும் பல பெண்கள். ஆனால் மானிடா சரண்யா, வித்தியா, சேயா, ஹரிஸ்னவி இப்படியும் ஒரு வரிசை உலகில்.

கண்டன பேரனி, ஆர்ப்பாட்டம், உணர்ச்சி பொங்க பேச்சுக்கள் நாள் செல்ல ஊசிப்போன வடையாய் போவது ஏனோ?

தங்கையை ஒருவன் கேலி செய்தால் அவளை அடிக்கும் அண்ணன். இன்னொரு தங்கையை கேலி பண்ணுவதை கேட்பது யார்? தந்தை மகளை பாசத்தால் கட்டியணைப்பதையும் மோகத்தால் கட்டியணைப்பதையும் வேறு பார்க்க முடிகிறதா?  

வேறு ஒரு  பெண்ணின் கற்பழிப்பை பேசும் நீ உன் மனைவியின் விருப்பம் இன்றி அவளை இணைவதும் ஒரு கற்பழிப்பு தான் என்பதை எப்படி புரிய வைப்பது?

காதலர் தினத்தில் 10 ஆயிரம் பெண்கள் தங்கள் பெண்மையை இழக்கிறார்கள் என்று அதிர்ச்சியடையும் நாம் அதை செய்ய தூண்டியவர்களை தடுப்பது இல்லை ஏன்? இரு கைகள் வேண்டும் கைத்தட்ட என்பதை மறந்து பெண்மையை மாத்திரம் தூற்றுகிறோம்.

சேற்றைக் கண்டால் மிதிப்பதும் நீரைக் கண்டால் அதை கழுவி விடுவதும் ஆண்களின் இயல்பு என்று அவர்களின் தவறை சர்வ சாதாரணப்படுத்தும் நீங்கள் பெண்ணை தூற்றாதீர். தவறு யாருக்கும் இயல்பு அப்படி தவறிய பெண்களை, விதவைகளை, மனைவியாய் ஏற்க நீ தயாரா அப்போது பேசு பெண் விடுதலையை பற்றி!

அரசர், செல்வந்தர் பலதாரம் கொண்டால் அதை பெரிதுபடுத்தாத நீங்கள் அதையே பெண் செய்தால் அவளை தாசி என்று தரம் தாழ்த்த தயார். காதலி பிரிந்து சென்றால் அவள் துரோகி, மனைவி வேறு ஒருவனை தேடினால் அவள் பச்சத்துரோகி வீட்டை விட்டு பெண் மனம் விரும்பியவனுடன் இணைந்தால்  அவள் ஓடுகாளி என்று வர்ணிப்பதும் அவளுக்கும் பட்டமளிப்பதும் கிசு கிசுப்பதையும் செய்யும் நாம் அவளிடம் பணம் இருந்தால் இவற்றை மறந்து விடுகிறோம்.

சினிமா உலகமும் இதனை சர்வசாதாரணமாக காட்டி நிற்கிறது.

ஆணுக்கு உடலை முழுவதும் மறைத்து  ஆடை வழங்கி விட்டு பெண்ணை கவர்ச்சியாய் காட்டியது யார்? ஆனால் அவளை பார் இந்த ஆடை தேவையா? இதுவும் இல்லாமல்  நடித்து இருக்கலாம்.. இவள் எல்லாம் பெண்ணா? என்று தூற்றுகிறோம்.

அந்த தவறை அங்கு செய்யத் தூண்டியவரை மறந்து விடுகிறோம். தவறிழைப்பவனை விட அதற்கு தூண்டுபவனுக்கு தண்டனை வழங்க வேண்டும்.

இதை மறந்து விடுவது ஏன்? உங்களுக்கு தெரியுமா? பாலியல் கலாசாரம் இன்று பிரபலமாக இருக்கிறது. ஏன் இது இதற்கு முன் நடக்கவில்லையா? நடந்தது. ஆனால் மறைக்கப்பட்டு இருந்தது. இன்று அதை ஊடகங்கள் அம்பலப்படுத்தி விடுகின்றன. இதனால் என்ன இலாபம்?

அவர்களுக்கு உரிய நீதி கிடைத்து விட்டதா? இல்லை அதற்காக ஊடகங்கள் தமது ஒரு கூற்றை வலியுறுத்தும் அது மாத்திரமே. ஆனால் தீமை மட்டும் அதிகம் நடந்தேறுகிறது.

இதனால் அச்சம் நீங்கி, எவ்வாறு தவறை சரியாக செய்வது என்ற துணிவு பிறந்து விட்டது. இந்த வெளிப்பாடு எமது தவறை தெளிவாக செய்து குற்றவாளி சிக்காமல் தப்பித்துக்கொள்ள உதவுகிறது.

ஆம், இன்று நான் சொல்வதை உன் வீட்டில் கேட்டுபாருங்கள். உங்கள் வீட்டுப் பெண்கள் சொல்வார்கள் அவர்கள் அடையும்  துன்பங்களை.பேரூந்து பயணங்களை, சாலை பொறுக்கியின் தொல்லைகளை, உறவு முறைகளின் கெடுபிடிகளை, தொழில் செய்யும் இடத்தில் வற்புறுத்தல்களை, ஆசிரிய, வைத்திய, வணிக துறைசார்ந்தோர் தரும் அருவருப்புக்களை ஆயிரம் ஆயிரம். பாரதி கண்ட புதுமை பெண் இல்லை.

இன்று உலகில் ஓர் அன்னை தெரேசா, கல்பனா சௌளா, மலாலா எங்கிருந்து வருவார் இன்று அரும்பும் மொட்டையே நசுக்கும் காடையர் கூட்டம் உலகில் வாழும் போது.

சிறு வயதில் பெண் பிள்ளைகளுக்கு பாலியல் அறிவை கொடுக்க வேண்டும். தற்காப்பு கலையை கற்றுத்தர வேண்டும் என்று முழங்கும் இடி மின்னல்கள் மழையாய் பெய்து பயன் தர மறுப்பது கவலையளிக்கிறது.

தகவலை தந்திட ஊடகங்கள், சமூக அமைப்புகள், காவல்துறைகள், சங்கங்கள், குழுக்கள், நீதிமன்றங்கள் என்ற இந்த முழு உலகமும் இன்றும் பெண்களை அடிமைகளாய் நசுக்குவது தான் கசப்பான உண்மையாகும் என்பதை நாம் ஏற்றுதான் ஆகவேண்டும்.

பண்டைய கலாசாரம் கற்பழித்தவனுக்கே கட்டிவைப்போம்.

அதை இன்று செய்தால் சிறுவர் திருமணம் பலருடன் மறுமணம் பற்றி பேச எம்மால் முடியுமா? 

ஆட்சி சபைகள் கூடுவதும் அமைச்சுப் பதவி வழங்குவதும் தேர்தல் நடப்பதும் பாதை அமைப்பதும் சொகுசு கட்டிடம், பூங்கா, துறைமுகம், தொழில்சாலை, வெளியுறவு கொள்கை, வெளிநாட்டு பயணம் இதுவா அரசியல்? வாத பிரதிவாதங்களும் இலாப நட்டம் மட்டுமே இன்று நாட்டின் பிரச்சினைகள் என்று பாராளுமன்றம் கூடி கலைகிறது.

இதில் தினம் ஒரு பிரேரணை. இதுவா ஆட்சியமைப்பு. பெண்களை மதித்து இங்கு ஏதேனும் செய்ய முடியுமா? இந்தியாவில் அரசியல் உள்ள பெண்கள் சாதனைபுரியவில்லையா? வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஓர் பெண்தானே, ஏன் ஒரு மாநிலத்தையே நிர்வகிக்கும் அம்மா ஜெயலலித்தாவும் ஒரு பெண்தானே.

திறமைக் கொண்ட பெண்களை நாம் அவதானிப்பது இல்லையா? பெண்களுக்காக நாம் ஏதாவது செய்வோமே.

ஏட்டுச் சுரக்காய் கறிக்கு உதவாது பெண் விடுதலையை ஏட்டில் வடிக்காமல் பெண்களுக்காக ஏதாவது செய்வோமே.

கிளிபோல் மனைவி இருந்தாலும் குரங்கு போல் வைப்பாட்டி வைத்துக்கொள்ளும் ஆண்களை  திருத்த வழி செய்வோம். பாலியல் முறைகளில் பெண்கள் தண்டிக்கப்படுவதையும் ஆண்கள் மன்னிக்கப்படுவதை மாற்றியமைப்போம்.

அதனுடன் கைகால் இழந்த பெண்கள் மரணிக்காத போது மானத்தை விட உயர்ந்த கற்பை இழந்த பெண்களை தற்கொலைக்கு தள்ளாது அவர்கள் வாழவும் வழி செய்வோம்.

பல பெண்களை அனாதைகளாக்கி  தைரியமாக நடமாடும் ஆண்கள் இவ்வுலகில் இருக்கும் போது பெண்களை மாத்திரம் ஏன் மரணிக்க தூண்டுகிறோம். இராமனுக்கு ஏற்ற சீதையும் இங்கில்லை.

கண்ணகியின் அன்புக்கு உகந்த கோவலனும் இங்கில்லை. உடன்கட்டை ஏறுவதை மாற்றிய நாம். பெண்களின் அடிமைதனத்தை அகற்றி அவள் உயர வழி சமைப்போம். வசை சொற்காளால் பெண்ணை வாட்டாமல் சமுதாய அமைப்பில் நீதி அநீதியை சரி சமமாக பெண்களுக்கும் பெற்றுக் கொடுப்போம்.

பல விசாரணை, பல கைதுகள், பல தீர்ப்புக்கள், பல விடுதலைகள், பல கொந்தளிப்புகள் காலம் மாற நடைமுறையும் மாறும். எப்போது தீர்ப்பு வரும் என்ற ஆவல் மாறுமா? பாதிப்பு மாறுமா? இந்த அவலங்கள் மாறி திருடனாய் பார்த்து திருந்தி பெண் அடிமை அழிக்கப்பட்டால் அன்று  நாம் துணிந்து கொண்டாடுவோம் மகளிர் தினத்தை.

ஒரு நாளில் பெண்ணை உயர்த்தி மற்றைய நாளில் பெண்ணை நசுக்கும் மிருகதனத்தை மாற்றிடுவோம். நாம் பரிணாமம் கொண்டு பல வருடம் ஆனாலும் இன்றும் வால் இல்லா குரங்குகளாய் இருப்பதை கண்டு வெட்கி திருந்துவோம். பெண்மையை உயர்த்துவோம்.

பெண்மையே துணிந்து இன்றும் நம் விடுதலைக்காக போராடிடுவோம் வா. எம்மால் இவ்வுலகில் அனைத்துமே செய்ய முடியும். எம்மால் முடியாதது ஒன்றும் இல்லை.

எம்மை நசுக்கும் காடையரின் தகுதி இல்லா வார்த்தைகளை காதில் வாங்கி உள்ளத்தில் புழுங்காமல் அதை ஒழித்துக்கட்டி துணிந்து நடக்க எத்தணிப்போம். 

நானும் உங்களுடன் இணைய தாயர். மகளிர் தின வாழ்த்துக்களுடன் பெண்ணாய் பிறந்ததுக்கு பெருமைப்படும் பெண்ணிவள்


இரோஷா வேலு.