கர்ப்பிணிகள் உடற்பயிற்சி செய்வதை எப்போது நிறுத்த வேண்டும்?

May 06, 2016


கர்ப்ப காலத்தில் உடற்பயிற்சி செய்வது நல்லது என்று பலர் சொல்வதைக் கேள்விப்பட்டிருப்போம்.

மேலும் கர்ப்ப காலத்தில் நன்கு சுறுசுறுப்புடனும், ஆரோக்கிய பிரச்சனைகளையும் சந்திக்காமல் இருக்க வேண்டுமானால், சரியான உணவுகளை உட்கொண்டு, உடற்பயிற்சிகளை செய்து வர வேண்டியது அவசியம்.

மேலும் நிபுணர்களும், கர்ப்பிணிகள் உடற்பயிற்சி செய்வது பிரசவம் எளிதாக நடைபெற உதவும் என கூறுகின்றனர்.

ஆனால் சில கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு உடற்பயிற்சி செய்ய முடியாத அளவில் சில பிரச்சனைகளை சந்திப்பார்கள். இப்படி பிரச்சனைகளை சந்திக்கும் நேரம் உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாமா என்ற சந்தேகம் எழும்.

ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை, கர்ப்பிணிகள் எப்போது உடற்பயிற்சி செய்வதை நிறுத்த வேண்டும் என்பதை வெளிப்படுத்தும் சில அறிகுறிகளைப் பட்டியலிட்டுள்ளது. அதைப் படித்து அந்த அறிகுறிகள் இருந்தால், உடனே உடற்பயிற்சி செய்வதை நிறுத்த வேண்டும்.

தலைச்சுற்றல்
உடற்பயிற்சி செய்யும் போது தலைச்சுற்றலை நீங்கள் தொடர்ந்து உணர்ந்தால், உங்களுக்கு ஓய்வு தேவைப்படுகிறது என்று அர்த்தம். இம்மாதிரியான தருணத்தில் சிறிது தண்ணீர் குடித்து, நன்கு ஆழ்ந்த மூச்சு விட வேண்டும். இதனால் நரம்பு மண்டலம் அமைதியடையும்.

தலைவலி
ஓர் கர்ப்பிணி பெண் மிகுந்த சோர்வுடன், தலைவலியையும் உணர்கிறீர்களா? அப்படியெனில் உடற்பயிற்சியினால் வியர்வை அதிகம் வெளியேறி, உடலில் நீர்ச்சத்துக்களின் அளவு குறைந்து, அதன் காரணமாக தலைவலி ஏற்படுகிறது என்று அர்த்தம். எனவே இந்த சூழ்நிலையில் உடற்பயிற்சி செய்வதைத் தவிர்த்து, குடிக்கும் நீரின் அளவை அதிகரிக்க வேண்டும்.

 

நெஞ்சு வலி
கர்ப்பிணிகள் இரண்டாம் மூன்று மாத காலத்தில் நெஞ்சு வலியை உணர்வார்கள். இதற்கு காரணம் குழந்தையின் அதிகப்படியான எடையினால், அப்போது முதுகு வலியுடன், நெஞ்சு வலியும் சேர்ந்து வரும். இந்த சூழ்நிலையிலும் உடற்பயிற்சி செய்வதை நிறுத்த வேண்டும்.

மூச்சு விடுவதில் சிரமம்
மூச்சு விடுவதில் சிரமம் இருந்தாலும் கர்ப்பிணிகள் உடற்பயிற்சி செய்வதை நிறுத்த வேண்டும். ஒருவேளை உடற்பயிற்சியின் போது மூச்சு விடுவதில் சிரமம் இருந்தால், அமர்ந்து மூச்சை உள்ளிழுந்து, மெதுவாக வெளிவிட வேண்டும்.

இரத்தக்கசிவு
கர்ப்ப காலத்தில் இரத்தக்கசிவு ஏற்படுவது என்பது சற்று கவலைக் கொள்ள வேண்டிய ஒன்று. ஒருவேளை உங்களுக்கு உடற்பயிற்சி செய்யும் போது இரத்தக்கசிவு ஏற்பட்டால், சற்றும் தாமதிக்காமல் உடனே மருந்துவரை அணுகுங்கள்.

வயிறு சுருங்குவது
கர்ப்ப காலத்தில் வயிறு சுருங்கும் போது கடுமையான வலியை உணரக்கூடும். இப்படி வயிறு சுருங்க ஆரம்பித்தால், பிரசவ நேரம் நெருங்கிவிட்டது என்று அர்த்தம். ஆகவே இந்த சமயத்திலும் உடற்பயிற்சி செய்வதை தவிர்த்து, மருத்துவமனையில் உடனே சேர்ந்துவிடுங்கள். ஏனெனில் சில உடற்பயிற்சிகள் வேகமாக வயிற்றை சுருங்கச் செய்யும். ஆகவே கவனமாக இருங்கள்.

வேகமாக இதயத்துடிப்பு
கர்ப்பிணிகள் உடற்பயிற்சி செய்யும் போது இதயத்துடிப்பு மிகவும் வேகமாக இருந்தால், அத்தகையவர்கள் உடற்பயிற்சி செய்வதை உடனே நிறுத்த வேண்டும் என்று அர்த்தம்.