அன்னை நீ இருக்கையிலே : அன்றொரு நாள் கடமையுன்னி இல்லம் நீங்கி ஆங்கேயோர் வாகனத்தில் செல்கையிலே

January 19, 2016

 

 

அன்றொரு நாள் கடமையுன்னி இல்லம் நீங்கி

ஆங்கேயோர் வாகனத்தில் செல்கையிலே

என் பின்னே அமர்ந்திருந்த இளைஞர் சில்வோர்

தந்தாயைப் போற்றியுரையாடல் கேட்டு

என்னருகே அமர்ந்திருந்த வோர் மூதாட்டி

எழிலுடனேயவர் தம்மைப்பார்த்து மக்காள்

அன்னையினைப் போற்றுகின்ற நீ விரென்றும்

நன்னலம் பெற்றே இவ்வுலகில் வாழ்வீர் ரென்றாள்

 

என்ற மொழி கேட்டது மென் நெஞ்சினிலே

எழுந்ததுவோர் இன மறியாச் சோகமைதப்

பொன்றியென்னும் போதிலென்னைப் பதைக்கவிட்டே

பிரிந்த அன்னை நினைவு என்னை வாட்டக்கண்டேன்

கன்றையணை தாய்ப்பசுவும் மடிந்துபோகக்

கயிறறுந்த பட்டம் போன்ற வாழ்க்கைப்பாதை

என்றுமென தாகுமென  எண்ணி வாடும்

ஏக்கமொன்று என் மனதை நிறைக்கக்கண்டேன்

 

நாளாந்த கடமைகளை முடித்து வீடு

நாடுகையில் எதிர்நோக்கி அன்புடனே

சேய்மாட்டுக்கனிந்துருகிச் சேர்ந்தனைத்தே

சோர்வு நீக்கும் அன்னை அன்பு எனக்கு இல்லை  பாழான பெருந்துயரம் பீடித்தாலும்

பரிவுடனே தீர்க்கும் தெய்வம் அகத்திலில்லை

பேரான பெருஞ்செல்வம் நிறைந்திருந்தும் வீட்டைப்

பேரொளி செய்யும் எழில்ஜோதி அங்கேயில்லை

 

மனதிலே அழுந்திவிட்ட பெருந்துயரை

மறந்திடவும் வழிகாணாதயங்கி ஆங்கோர்

பொழுதினிலே இறைகோயில் அண்மிச்சென்றே

பேரெழிலுடனே இலங்குமிடம் நோக்குகையிலென்

சார்பினிலே கரம் நீட்டி அரவணைக்கக்

காத்திருக்கும் மரியன்னை உருவங்கண்டேன்

நேரினிலே தாய்மை அன்பு தோன்றக்கண்டே

நேயமுடன் அம்மா என்றழைத்தின்புற்றேன்

 

ஆயிரமாம் அன்னையர்கள் சேர்ந்திடினும்

அன்னையுந்தன் அன்பிற்கு ஈடாவரோ

பாயிரங்கள் பல போற்றும் அன்னை நீயென்

பக்கத்திலிருக்க நானும் பதைப்பதேனோ

சேயெனக்கு இனிமேலே கவலையில்லை

சேர்ந்திடுமென் பொறுப்பு எல்லாம் உன்பதமே

போய்வருவேன் தாயே நான் என்று கூறிப்

பொங்கி வரும் மகிழ்ச்சியுடன் திரும்பிச்சென்றேன்.

 

எஸ். றெஜீனாவதி

மட்டு. நகர்