அன்னையே! : ஒவ்வொரு நொடியும் கனவு வளர்த்து கனவுக்குள் உயிர் வளர்த்து

January 28, 2016அன்னையே!

ஒவ்வொரு நொடியும்

கனவு வளர்த்து

கனவுக்குள் உயிர் வளர்த்து

பத்தியமிருந்து பத்திரமாய்

இடுப்பு வலி பொறுத்து என்னை

இறக்கி வைத்தவளே!

 

மழையில் நீராடி

மண்ணோடு போராடி

வெயிலுக்கு கூட

நிழல் தேடி ஒதுங்காது

நெந் நீர் சிந்தி

எமக்காய் நீ செய்த தியாகம்

எண்ணிலடங்காது

வறுமையில்

வயிறு காய்ந்திட

நோயில் தந்தை

பாயில் கிடக்க

ஊரும் உதவவில்லை

உன் உறவுகளும் உதவவில்லை!

பணம் கேட்டு

பல படிகள் ஏறியும்

வெறும் கையுடனே

வீடு வருவாய்!

 

வாழை கூட நமக்கு

வாழ்வு தந்தது

பாக்கு கூட

பசி போக்கியது

இவைகளுக்குள்ள

இரக்கம் மனிதனுக்கு

ஏனோ இல்லாமல் போனது

 

உறவுகள்

உயர்ந்திருந்தும்

அன்று உனக்குதவ

யாருமில்லையென்று

நீ வடித்த கண்ணீர்

இன்றும் என்னில்

இருக்கத்தான் செய்கிறது

 

கடவுளின் கருணையால்

கரங்களை இரும்பாக்கினாய்

கொழுந்து கிள்ளி

கொடிய துன்பத்தை விரட்டினாய்

காலம் கனிந்தது

கண்ணீர் ஓய்ந்தது

எமக்கு வசந்தம் தந்தவள் நீ

எம்மில் வாசம் செய்பவள் நீ

எம் உயிர் நீ!

எம் உலகம் நீ!

 

ந. ஜனார்த்தன் 
ஹொப்டன்