அன்புத்தாய்! : ​இது கவிதையல்ல என் மூச்சு பதிக்கின்ற முணகல் சிற்பங்கள்

March 17, 2016


இது கவிதையல்ல

என் மூச்சு பதிக்கின்ற

முணகல் சிற்பங்கள்

நேற்று கொதித்த

எரிமலை குழம்புகள்

 

எழுதிட எழுதிட

எந்த மொழியானாலும்

சிந்தைக்கு செழிப்பு தான்

மெய்க்கு சிரசு போல்

மாசற்ற அன்புக்கு தாய்தான்

 

உள்ளக் குளத்தை துயர்

வெள்ளமடித்துப் போனாலும் - கொடுங்

கோடை வறட்சித் துன்பக்

கோடு கிழித்தாலும்

கொட்டியும் ஆம்பலும் போல்

கெட்டியாய் வாழ்பவள் தான்

அன்புத்தாய்

 

இந்த பார்

கண்ணை மூடி

காடும் மேடும்

கல்லும் முள்ளும்

கடந்து போவதை போல்

கடினம் என்கின்றனர்

கருவறைக்குள் சுமந்து

பிரசவிக்கும் பத்து மாதங்களை

 

 நீ

கண்மூடும் வரை

நெஞ்சறைக்குள் சுமந்து

என் மேல் படரும்

நெருக்கலும் உருக்கலும்

தொடும் போதும் விடும் போதும்

நெருங்கிப் போகும் நாளும்

வலிமை என்கிறேன்

 

கடலைப் போல்

கட்டிக் கொள்ளும்

வெள்ளையுள்ளமே தாய்

உப்பாய் நிறைந்த உன் அன்பில்

ஓடி வந்து கலக்கும்

மழை நான் நதி நான்

பிரிக்காமல் உனக்குள்ளே

அணைப்பாயே

 

ஜெ. ஈழநிலவன்