பெண்மை போற்றுவோம்...!

March 08,2016


மங்கையாய் பிறந்திட
மாதவம் செய்ய வேண்டும்
என்பதை போற்றி நீயும்
அவளை புகழ்ந்திட வேண்டும்...
மஞ்சத்தின் மென்மையாம் மலரவள்
மங்கை நெஞ்சத்தில் கொள்வாய்

நேசமெனும் கங்கை...!
கருவில் தொடங்கி உதிரத்தை
பாலாய் திரட்டி உன்
பசி தீர்த்து பாசம்
பொழிந்து கல்லறை வரை காத்து நிற்பவள்
உன் தாய்...
சேவை செய்வதே
சுகமாய் எண்ணி மறுதாயாவாள் உன் அக்கா...!

பொங்கிப் பிரவாகிக்கும்
பாச ஊற்றில் நித்தம் நனைத்திடுவாள்
உன்னை உன் தங்கை...
பொத்திப் பொத்தி
உனை பத்திரம் காப்பாள் உன் பாட்டி...!

பெண்டிரைக் கண்டீரோ
பொக்கிஷப் பெட்டகங்களை உணர்ந்தீரோ...
இன்னும் மரியாதை பிறக்கவில்லையோ
பிறந்த வீடு உனக்கு பாடம் புகட்டவில்லையோ...!
முற்றத்து மல்லிகை தான் மணப்பதில்லையாம்
இனி உன் முற்றத்து பெண் மல்லிகை மட்டும்
எங்கனம் மணக்கும் உனக்கு...
இரு கைகூப்பி வணங்கும்
ஆண்டாலுக்கும் அனங்குக்கும்
என்ன வித்தியாசம் கண்டீர்...!

அவள் சொல்லா மொழிகள்
நீரறிந்தால் நரகத்தின் வாடையின் ஒத்திகை அறிவீர்...!!
தேம்பிக்கொண்டு வரும் அழுகையை அடக்கி ஆழ்கிறாள் அவள்..!
வேஷம் போட தெரிந்தவள்
கண்ணீரை மொழிபெயர்க்கிறாள்
புன்னகையாய்..! வெட்கித் தலை கூனிகிறாலோ
இல்லையோ நிந்தனைகள் தலைக்கு மேல்
தாண்டவம் ஆடப்பட்டே கூனிக் குறுகுகிறாள்..!

கயிற்றினால் கை கட்டப்படவில்லை
சங்கிலிகளால் கால் பின்னப்படவுமில்லை
இருந்தும் இன்று சிக்குண்டே இருக்கிறாள் அன்று சீட்டுக்குருவியாய் சிறகடித்தவள்..
போதைக்கே அவள் பெயர் போகிறாள்
பேதை அவளும் ஒரு உணர்வுள்ள ஜீவனடா..!

பூ அவளை பறித்து சூடி எரித்து விட்டாய்
உன் சுயநலத்தால்..!
அற்பக் கண் கொண்டு அங்கமெங்கும்
அலசிப் பார்க்கிறாய் மதுவினில் மாதுவை
மென்று தின்றதை போல்
நசுக்கியே நடுத்தெருவில் பறைசாற்றுகின்றாய்.. !
கண்ணியம் காக்க பட வேண்டும்
அவளின் பெண்ணியம் பேணப்பட வேண்டும். . !
தாயும் ஒரு அவளே ! தங்கையும் ஒரு அவளே !
மங்கையும் ஒரு அவளே !
மதித்து நட மனிதம் போற்றி நட உன்னை கருவில் சுமந்தவளும்
ஒரு அவளே உன் கருவை சுமப்பவளும் ஒரு அவளே..!!

பாரதியாய் வாழ்ந்துப் பார்
ஓர் புதுமைப் பெண் உன்னை
நாடி வருவாள் ராமனாய் வாழ்ந்துப்பார்
ஓர் சீதை உன் கரம் பற்றுவாள்...
பெண்களை பேணி நட உன் ஒட்டு
மொத்த பெண் சந்ததிகளும் காக்கப்படுவர்
இறைவன் ஆசியில்...!!


கவிதாயினி சஹீகா
வெளிமடை.