மித்திரன் சிறுகதை : விதவையின் வியர்வை!

January 29, 2016அன்று பூத்த மலர்கள் ஆண்டவன் அடி செல்லவும் பசுக்கள் தம் கன்றுகளைத் தேடி பட்டிக்கு செல்லவும் தொழிலாளர்கள் தமது வேலையை முடித்து வீடு செல்லவும் கதிரவன் தானும் தன் ஒய்வறைக்கு செல்லவும் அழகாக மெழுகிவிட்டால் போல் தோன்றும் வானிலே புள்ளிக்கோலங்கள் போட்டதை போல நட்சத்திரங்கள் மின்னிச் சுடர்விட்டு ஒளிபரப்பி சந்திரனை சற்றும் தயக்கமின்றி வரவேற்றுக் கொண்டிருந்தன.

துர்க்கா தன் கடமைகளை அவசரமாக முடித்துவிட்டு எஜமானி அம்மா குளித்துவிட்டு வருவதற்குள் தேநீர் தயார் செய்து சுடுதண்ணீர்ப் போத்தலில் ஊற்றி வைத்தாள்.

தன் களைப்பை மறக்க சிறிது நேரம் ஜன்னல் கம்பி வழியே தலை சாய்ந்தவாறு நின்றிருந்தாள்.

அப்போது காற்றிலே இலைகளை உதிர்த்த வெறும் கொம்பாக ஒரு மரம் தன்னந்தனியே நிற்பது அவள் கண்ணில் தென்பட்டது.

இந்த மரமும் என்னைப் போல் அத்தனையும் இழந்து நிற்கிறதோ என்று துர்க்காவின் கடந்த காலத்தை மீட்டிப் பார்த்தாள்.

வன்னி பெருநகரில் வந்தாரை வாழவைக்கும் வட்டக்கச்சி எனும் பசுமையான கிராமத்தில் பிறந்தவள். தாய், தந்தை, அண்ணன் என வறுமையிலும் இன்பமாய் வாழ்ந்த குடும்பம்.

துர்க்காவிடம் அழகுக்கு குறைவில்லை. நீண்ட அழகிய கூந்தல், அளவான உயரம், எடுப்பான தோற்றம்... என அவள் அழகை கூறிக்கொண்டே  போகலாம். இவள் படிக்கும் பாடசாலையில் தான் கீதனும் படித்து வருகின்றான். துர்க்கா மிகவும் கெட்டிக்காரி.

கீதனும் அப்படித்தான். எந்தவொரு போட்டியாயினும் இருவர் மட்டுமே பாடசாலை சார்பில் சென்று வருவார்கள்.


காலம் கணப்பொழுதில் உருண்டோடியது. பாடசாலையிலிருந்து வெளியுலகத்துக்கு வந்த பின்னரும் இருவருக்கிடையிலான நட்பு தொடர்ந்தது. அதுவே பின் காதலாக மாறியது.

இரு மனங்களிலும் தேங்கிக் கிடந்த அன்பு  அன்றொரு நாள் வெளிக்கிளம்பியது. இருவருக்கிடையிலான அன்பு பரிமாறப்பட்டது.

துர்க்காவின் தந்தை படித்தது போதும் என அவளை வீட்டில் நிறுத்திவிட்டார். இவர்கள் காதல் மட்டும் கண்களால் துளிர் விட்டது. இதனால் துர்க்கா உறவுகளை விட்டு கீதனுடன் சென்று புது வாழ்வை ஆரம்பித்தாள்.

தினமும் வேலைக்கு சென்று வரும் கீதன் அன்றொரு நாள் தள்ளாடிய படி வீட்டின் வாயிலருகே வந்து கொண்டிருந்தான். பதற்றத்தில் துர்க்கா ஓடிச் சென்று அவனை பிடித்தாள்.

அப்போது தான் அவன் இயலாமையால் தள்ளாடவில்லை, மது அருந்திவிட்டு வந்திருக்கிறான் என்பதை புரிந்து கொண்டாள்.

அவனுடன் எதுவும் பேச விரும்பாது அவனை உறங்க வைத்துவிட்டு தன் நிலையை நினைத்து தானே நொந்து கொண்டாள்.

விடிந்ததும் நடந்தவற்றை கீதனிடம் கேட்டாள்.

அதற்கு "தொழில் செய்த களைப்பப்பா தெரியாம குடிச்சிட்டன்" என்றவனிடம் மேலும் கதையை நகர்த்த விரும்பாது இடத்தை விட்டு நகர்ந்தாள்.

களைப்பிற்கு குடிக்க ஆரம்பித்த கீதன் நித்தமும் அந்தப் பழக்கத்துக்கு ஆளானான்.

குடும்பத் தலைவன் குடிக்கு அடிமையானால் குடும்பங்களில் என்ன நடக்குமோ அதே நிலைமைதான் துர்க்காவுக்கும் ஏற்பட்டது.

தன் இரு குழந்தைகளையும் மனைவியையும் நித்தமும் அடித்து கொடுமைபடுத்தி வந்தான். 

பெற்றோரின் சொல்லை மீறி காதலனே கெதி என ஊர் விட்டு ஊர் வந்து வாழ்க்கை நடத்தியதால் ஏற்பட்ட பலனை இப்போது நன்கு அனுபவிப்பதாக எண்ணி நொந்துகொண்டாள்.

தன் பிள்ளைகளான சயந்தன், சத்யா இருவரும் பாடசாலை சென்ற பின்னர் வீட்டு வேலைகளில்  துர்க்கா ஈடுபட்டிருந்தாள்.

அப்போது அங்கு வந்த யாரோ ஒருவன் "உன்ட மனுசன் போதை தலைக்கேறி நிலை தடுமாறி ஆற்றுக்குள் விழுந்துவிட்டான்" என கூறினார்.

இதைக் கேட்டதும் துர்க்காவின் கையில் இருந்த பாத்திரம் 'கணீர்' என்று ஒலியெழுப்ப நிலத்தில் விழுந்தது.

அவள் அழுது புலம்பி வீதிக்கு வருமுன் கணவனது உயிரற்ற உடல் வீட்டுக்கு கொண்டுவரப்பட்டது.

குழந்தைகள் தந்தையை பார்த்து அழுது அழைக்கவும் துர்க்கா கணவன் மீது விழுது புலம்ப வீடே சோகத்தில் மூழ்கியது. உறவுகள் ஏதும் இல்லாத துர்க்கா அயலவர் உதவியுடன் கணவரின் இறுதிக் கிரியைகளை செய்து முடித்தாள்.

தன் இரு பிள்ளைகளையும் நல்வழிப்படுத்தவும்  கற்பிக்கவும் பெரிதும் சிரமப்பட்டாள். தன் வீட்டுக்கு சற்று அப்பால் உள்ள ஒரு மூதாட்டியை பராமரிப்பதாலும் அவரது வீட்டிலுள்ள வேலைகளை செய்வதாலும் சிறிது தொகை பணத்தை அவளால் சேர்க்க முடிந்தது.

அதன் மூலம் பிள்ளைகளின் கல்வித் தேவைகளை பூர்த்தி செய்தாள்.

சயந்தன் உயர்தர பரீட்சை எழுதிவிட்டு பெறுபேற்றுக்காக காத்திருக்கிறான். சத்யா சாதாரண தரம் படிக்கிறாள்.

தன் இரு பிள்ளைகளையும் படிக்க வைத்து அவர்களுக்கு சிறந்ததொரு எதிர்காலத்தை உருவாக்கித் தருவதில் உறுதியாய் இருந்தாள். அதற்காக இரவு பகலாக வியர்வை சிந்தி உழைத்து வந்தாள் துர்க்கா.

தான் பட்ட கஷ்டங்களையும் இன்னும் படும் பாடுகளையும் எண்ணி ஜன்னல் வழியே ஏதோ ஒன்றை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த துர்க்காவை வீட்டு எஜமானியம்மா தட்டி தன்னிலைக்குக் கொண்டுவந்தார்.

கையிலிருந்த முந்நூறு ரூபா பணத்தை துர்க்காவிடம் கொடுத்து வீட்டுக்கு செல்லும்படி கூறினார்.

அப்போது தான் துர்க்காவிற்கு மகனுடைய உயர்தரப் பரீட்சை பெறுபேறு வெளியாகியிருப்பதும் அதையறிய சயந்தன் பாடசாலைக்கு புறப்பட்டிருப்பதும் நினைவுக்கு வந்தது.

அந்த பணத்தை வாங்கிக் கொண்டு ஓட்டமும்  நடையுமாக வீடு வந்து சேர்ந்தாள்.

சயந்தனும் சத்யாவும் சுவரில் மாட்டப்பட்டிருந்த தந்தையின் புகைப்படத்துக்கு முன் அமர்ந்திருந்தனர்.

தாயை கண்டதும் மகிழ்ச்சி கழிப்பில் ஓடி வந்து "அம்மா, அண்ணா பாஸ் பண்ணிட்டார். இனி அண்ணா மேல படிச்சு டொக்டர் ஆகிடுவாரு" என்று சத்யா கூறியதைக் கேட்ட துர்க்கா தன் நெற்றியில் இருந்து வீழ்ந்த  வியர்வை பூக்களை தூவியதைப் போல் உணர்ந்தாள். தன் மகனை ஆரத்தழுவி கட்டிக்கொண்டாள். "அம்மா, நான் மேல படிக்க என்னோட டீச்சர்கள் எனக்கு உதவி செய்றதா சொன்னாங்க. 

நீங்க பாடுபட்டு உழைச்சது ஒரு நாளும் வீண் போகாது..." என்று சயந்தன் கூற "யாருடைய உதவியையும் நாம எதிர்பார்க்கக்கூடாது சயந்தா.

நீ நல்லா படிச்சு உத்தியோகம் பார்த்து தங்கச்சியையும் படிப்பிக்கனும்" என்று கூறி தன் இரு பிள்ளைகளையும் கட்டியணைத்தவள் தன் கண்ணீரை கணவனது புகைப்படத்துக்கு முன்னால் காணிக்கையாக்கினாள்.

 

கருணைராசா கஜேந்தினி,
கல்மடுநகர்.