சிறு­க­தை : தொடுவானம்...

May 25, 2015
நிம்மதி இல்லாமல் தவித்துக் கொண்டிருந்தேன்.

முன் பின் யோசிக்காமல் நான் செய்த முட்டாள்தனமான செயலை எண்ணி வெட்கப்படுவதா, வேதனைப்படுவதா  என்று துடித்துக் கொண்டிருந்தேன்.
எப்படி என்னால் இவ்வாறு நடந்து கொள்ள முடிந்தது? விளையாட்டுத்தனமாக, சிறுபிள்ளைத்தனமாக அல்லவா நடந்து கொண்டேன்.

அவர் என்னைப் பற்றி என்ன நினைத்திருப்பார். நிச்சயமாக தவறாகத்தான் நினைத்திருப்பார் என்பதில் சந்தேகமில்லை. சே... அதை நினைத்தால்தான் உயிரே நின்றுவிடும்போல் இருந்தது. 

என் வாழ்க்கையில் இப்படியானதொரு சம்பவமோ அல்­ல­து தடுமாற்றமோ நடந்ததுமில்லை, அதற்கு நான் இடம் வகுத்­த­துமில்லை. அப்படியிருக்கும் போது அறிமுகமில்லாத ஒருவருடன் நான் அவ்வாறு நடந்துகொண்டது சரியல்லவே... சரி ஏதோ தவறுதலாக தவறு செய்துவிட்டோம்.

மறந்துவிடலாம் என்றால்... ம்...ஹூ...ம்... முடியவில்லை. தேவையில்லாமல் எனக்குள் வந்து வேதனையைத் தருகிறார். அவரைப் பற்றிய எந்தவொரு எண்ணமும் எனக்குள் இல்லை. ஆனால் குற்ற உணர்வா என்னை இப்படிப் பாடாய்ப்படுத்துகிறது. எது எப்படியாயினும் முற்று முழுதாக அவர் என்னை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறார் என்பது உண்மையே! 

அவர் எனக்கு நெருக்கமானவரோ அறிமுகமானவரோ இல்லை. இரண்டு வருடங்களுக்கு முன் ஒரு முறை பார்த்திருக்கிறேன். அவருக்கு என்னைத் தெரியுமா என்பதே சந்தேகம்தான். தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை. வீணான மனக்குழப்பம் எனக்குள். தவறு செய்தவர்கள் வருந்த வேண்டும் என்பார்கள்.

அதனால்தான் நான் இப்போது வருந்திக் கொண்டிருக்கிறேன். ம்... பெருமூச்சோடு எனக்குள் அவர் பற்றிய சிந்தனையை மீட்டிப் பார்க்கிறேன். 

நாம் நமது அன்றாட வாழ்வில் பல தரப்­பட்­ட­வர்­க­ளை சந்திக்கின்றோம்.

எப்போதாவது ஒரு நாள் சந்திப்போம். சிலவேளை அவர்களே வந்து அறிமுகப்படுத்திக் கொள்ளுமளவுக்கு நாம் அவர்­களை மறந்துவிடுவதும் உண்டு. அதேபோல் தான் அவரை முதன்முதலில் பார்த்த சம்பவமும் மறந்துபோனது. 

சுமார் இரண்­டு வருடங்களுக்கு முன் "செயலமர்வு ஒன்றில்தான் அவர் அறிமுகமானார். "நபீஸ்" -  இதுதான் அவரின் பெயர். மகளிர் அமைப்பினூடாக நடந்த அந்தச் செயலமர்வு அவரின் தலைமையில்தான் நடந்தது. பொதுவாக இந்த மாதிரியான நிகழ்வுகளுக்கு நான் செல்வது மிகக் குறை­வு.

எனது நண்பியின் தூண்டுதலால்தான் அவர் பணியாற்றும் அந்த நிறுவனத்தில் மகளிர் அமைப்பில் ஓர் அங்கத்தவராக இணைந்துகொண்டேன். முதன்முதலாக நான் எதிர்கொண்ட செயலமர்வு "நபீஸ்"  சேரினுடையதுதான். அன்றோடு அவர் அந்த விட­யத்தை மறந்தும் போனார். 

ஓரிரு தினங்கள் கழித்து எனது நண்பியுடன் பேசிக் கொண்டிருக்கும்போது தான் பணியாற்றும் நிறுவனத்தைப் பற்றி அதனூடாகச் செய்யும் சமூக சேவைகள் பற்றியும் பொதுவாக அந்த அமைப்­­புக்­குள் பெண்கள் பலரும் உள்வாங்கப்பட்டு பல உதவிகள் செய்து வருவதாகவும் கூறினாள்.

அது மட்டுமல்லாது "நபீஸ்" சேரைப் பற்றியும் அவரின் பணிகள் பற்றியும் கூறினாள். அத்துடன் அவரும் உடன் இணைந்­து பல உதவிகள் செய்வதாகவும் உங்களுக்கு ஏதும் காரியம் ஆக வேண்டும் என்றால் பேசிப் பாருங்கள் என்று அவ­ரது தொலைபேசி இலக்­கத்­தை­யும் தந்தார். 

என்னைப் பற்றிக் கூற வேண்டுமென்றால் பொருளாதாரப் பிரச்சினையால் அன்றாடம் மனதால் போராடிக் கொண்டிருக்கும் ஒரு சராசரிப் பெண் நான். இதுவரை யாரிடமும் உதவி கேட்டதில்லை. எனது குடும்பத்தாரின் உதவிகளைப் பெற்­றே நாட்­களை கட­த்­திக் கொண்டிருக்கிறேன்.

சுயமாக வாழ்க்கையில் முன்னேற ஆவல் இருந்தாலும் அதற்கான வாய்ப்புக்கள் கிடைப்பதில்லை. 

"நபீஸ்" சேருடன் பேசுவதற்கு தயக்கமாக இருந்தது. பிறகு தைரியத்தை வரவழைத்துக் கொண்டு "பேசிப் பார்ப்போம்" என்று முடிவெடுத்து தொலைபேசியில் அழைப்பை ஏற்படுத்தினேன். பேசினார்... என்னைப் பற்றிய விபரத்தை கேட்டார். அனைத்­தை­யும் சொன்­னேன்.

முடிந்தால் உதவுவதாகக் கூறினார். இரண்டொரு முறை பேசிவிட்டு தேவையென்றால் அது சம்பந்தமாக தொலை­­பேசி அழைப்­பெ­டுப்­ப­தா­கக் கூறினார். அதன் பின்­னர்  அவர் பேசவேயில்லை. ஆனால் எனக்கு அவருடன் பேச வேண்டும்போல் இருந்தது. 

அவரின் அமைதியான அழகான தெளிவான ஆங்கிலம் கலந்த பேச்சு என்னைக் கவர்ந்தது. எனக்கு மிகவும் வியப்பாக இருந்தது. அவருடன் பேச வேண்டும் என்ற ஆவலைத் தூண்டியது.

ஆனால் எப்படிப் பேசுவது...? யாருடனேனும் பேசுவதென்றால் ஏதாவது கார­ணம் இருக்க வேண்டுமே... முதலில் நான் பேசிய விடயத்துக்கு பதில் கிடைத்தாகிவிட்டது. இனிமேல் எதைப் பற்றிப் பேசுவது என்று பல முறை யோசித்தேன். இறுதியில் அவருடன் பேசுவோம் என்ற முடிவுக்கு என் மனம் வந்தது. தெரிந்தவர் என்ற முறையில் அவருடன் அடிக்கடி பேசிப் பழகிக் கொண்டேன்.

அவரும் என்னோடு பேசுவார். நட்பு ரீதியிலேயே அவருடன் பழக வேண்டுமென்று விரும்பினேன். ஆனால் அவருடனான நட்பை மிக விரைவிலேயே இழப்பதற்கு நானே காரணமாகிவிட்டேனே என்­ப­து தான்  வேதனைக்குரிய விட­ய­மாகிப்போன­து. 

எனக்கு இலக்கியத்தில் ஓரளவு ஈடுபாடு உண்டு. கவிதைகள் மிகவும் பிடிக்கும். எழுதுவதை விட படிப்பதென்றால் மிகவும் பிடிக்கும். அன்றும் அப்படித்தான் ஒரு சில கவிதைகள்  எழுதிக்கொண்டிருக்கும்போது சடுதியாக அவரின் ஞாபகம் வரவே அவரையே வைத்து ஒரு கவிதை எழுதலாம் என்ற எண்ணம் எனக்குள் வரவே எதைப் பற்றி எழுதலாம் என்று யோசித்தேன்.

எப்படித்தான் அந்தக் கவிதை எனக்குள் வந்ததோ தெரியாது. எழுதிவிட்டு அவரிடம் "கவிதை அனுப்புகிறேன்... அக்கவிதைக்குள் ஒரு பதில் இருக்கிறது. கண்டுபிடித்து சொல்லுங்கள்" என்றேன். அவரும் "சரி" என்றார்.

விளையாட்டுத்தனமாகத்தான் அக்கவிதையை அனுப்பினேன். அதன் பின்னர் அவரிடமிருந்து எந்தவொரு பதிலும் வரவில்லை. தொலை­பே­சி­யிலும் அவர் தொடர்­பு கொள்­ள­வில்லை. எனக்கொரு மாதிரியாகப் போய்விட்டது.

குழப்பமாகவும் இருந்தது. நான் அனுப்பிய கவிதை பிடிக்கவில்லையோ... மீண்டும் அக்கவிதையைப் பார்த்தேன். 

நடு நிசி நேரத்திலும் 
நர்த்தணம் ஆடுகின்றன
வாசம் வீசும் பல நினைவுகள் 
ஸ்.... இது ரகசியம் புரிகின்றதா? 

நான் நினைத்ததைவிட வேறு அர்த்தமும் இருக்கின்றதே... அச்சச்சோ... தவறு செய்துவிட்டேனே... என்ன செய்வது? நான் கேட்ட கேள்விக்கும் அவர் பதில் தெரிந்துகொண்டார். வேறு மாதிரியான கருத்­தை புரிந்து கொண்டிருப்பாரோ? புரியவில்லையே. செய்வதறியாது என்னையே தேற்றிக்கொள்ள வேண்டியதாயிற்று. 

அந்த சம்­பவம் நடந்த அந்த நொடி­யி­லி­ருந்­து என்னோடு பேசுவதை முற்றாக நிறுத்திவிட்டார். நான் நிம்மதியை இழந்தேன். அவர் விரும்பாவிட்டாலும் தொடர்ந்தும் முயன்று கொண்டிருந்தேன். விசேட தினங்கள் வரும்போது வாழ்த்­துச் செய்­தி­களை தொலை­பே­சி மூலம் அனுப்­­புவேன்.

அவரும் அதை ஏற்று பதில் அனுப்­புவார். அவருக்கு என்னில் எந்தக் கோபமும் இல்லை. வேண்டுமென்றே என்னோடு பேசுவதை தவிர்த்துக் கொள்கிறார் என்று புரிந்தது. அன்றும் ஒரு முக்­க­ய­மான பெரு­நாள். எல்லோரையும் வாழ்த்­துவதை போல் அவ­ருக்கு வாழ்த்­து கூற எண்ணினேன்.

நான் அனுப்­ப முயன்ற வாழ்த்து எப்­ப­டியோ வேறொன்­றா­க தொலை­பே­சியில் மாறி அனுப்­பப்­பட்­டு­விட்­ட­து. அதை மீண்டும் எடுத்துப் பார்த்த போதுதான் வாழ்த்து அனுப்­­பு­வதில் தவ­று ஏற்­பட்­டு­விட்­டது என்­ப­தை தெரிந்து கொண்டேன். தெரிந்து என்­ன பயன்? அவ­ருக்கு நான் அதை எப்படி விளக்­கிக் கூறு­வேன்?

எப்­ப­டியும் என் விளக்­கத்தை அவர் செவி­ம­டுக்­க­மாட்டார் என்­பது என­க்கு தெரி­யா­தா? இந்த தட­வையும் தவ­றா­ன புரி­த­லுக்­கா­கவே வழி­வ­குக்­கப்­பட்­டு­விட்­டது. அதை நினைத்து நினைத்து நிம்மதி இழந்தேன்.

நடந்த விடயங்களே மீண்டும் மீண்டும் நினைவுக்குள் நிழலாடியது. அடிக்கடி அடிக்கடி நான் அவருக்கு சிரமத்தைக் கொடுத்திருப்பேனோ என நினைத்து எல்லாவற்றுக்கும் இறு­தி­யாக ஒரு மன்­னிப்பு தகவல் அனுப்­பினேன்.  சரி பரவாயில்லை என்று ஒரே வரியில் பதில் அனுப்பியிருந்தார். 

அதன் பின்னர் எனக்குள் பெரிய ஆறுதலாக இருந்தபோதிலும் அடிக்கடி மனம் செயலிழந்தது போலாகிவிடும். அவருடன் பேச முயற்சிப்பதேயில்லை.

அவரின் ஞாபகம் வந்தால் மனம் அமைதியற்றுப் போய்விடும். இத்தனைக்கும் நான்தானே காரணம். அனுபவித்துதான் ஆக வேண்டும். அவரிடம் எனக்கு எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லை. நிச்சயமாக நான் அவரிடம் எதிர்பார்ப்பது நட்பு ரீதியிலான உறவையே... இதை ஏற்றுக் கொள்வாரா அல்லது என்­னை புரிந்து கொள்வாரா? எப்படி நான் புரிய வைப்பேன்? தொடுவானமாய் தொலை தூரத்தில் இருந்த போதிலும் என் வாழ்க்கையில் அவர் மறக்க

முடியாதவராகிவிட்டார். அவரின் நட்பை நான் விரும்புகிறேன்.

அவர் விரும்பினால் சந்தோஷமே. இல்லாவிட்டால் ஏமாற்றங்களையே வாழ்க்கையாகக் கொண்டே எனக்கு இதுவும் ஒரு ஏமாற்றமே...
 

- ஷகி -