மித்­திரன் சிறு­கதை : அவருக்கு பைத்தியமா?

June 17, 2015
“அந்தாளு ஒரு மாதிரி... அதிகமா பேச்சு  வைச்சுக்காதே." அம்மாவின் வார்த்தைகளைச் சற்று அலட்சியத்துடன் ஏற்ற நான் எங்கள் வீட்டுக்குப் பின் புறமாய் உள்ள வீட்டை நோட்டமிட்டவாறு "ஏம்மா... அந்தாளு பார்க்க வயது போன மாதிரி தோனுது...”  எனது வார்த்தைகளில் அர்த்தத்தை உணர்ந்த   அம்மா "அந்த மனுசனுக்கு பைத்­தி­யமா ம்.

வெளிநாட்டிலிருந்து திருப்பி அனுப்பிட்டாங்களாம். உனக்குத்தான் பைத்தியங்கள் எண்டால் பயமாச்சே.  அதுதான் சொன்னேன்" என்றார். பின்னர் அம்மா கொடுத்த தேனீரை தன் கணவருக்கு கொடுப்பதற்காக தோட்டத்திற்கு நடந்தேன். 

கணவர் என்னைப் பார்த்து புன்னகைத்துவிட்டு "வாசு, நம்ம தோட்டத்திற்கு பக்கத்திலதானாம் அந்த முதியவரும் தோட்டம் செய்யப்போறாராம்.

ஆனா அவர் ஒரு லூசுன்னு எல்­லாரும் சொல்­றா­ங்­க. அதிகமா அவர்­ கிட்ட கதைக்க வேண்டாம்" என்று கணவர் சொல்ல "அட இங்கையும் அதே பல்லவியா? இல்லங்க... அவரப் பார்த்தா லூசு மாதிரி தெரியல.

ஏதோ சோகத்தை சுமந்தபடி இருக்கிறார் போல...” என்று கூறியபடி மிளகாய் கன்றுக்கு நீர் ஊற்றத் தொடங்கினேன். என் எண்ணமெல்லாம் அந்த முதியவரே நிறைந்­தி­ருந்­தார்.

அன்றொரு நாள் கணவர் பயிர்­க­ளுக்கு மருந்து தெளித்துக் கொண்டிருக்க நான் ஆலமர நிழலில் அமர்ந்திருந்தேன். "பிள்ள காலையில இருந்து சாப்பிடல, சாப்பாடு வீட்டிலதான் கிடக்கு. வீட்டுக்குப் போய்த்தான் சாப்பிடணும். இந்த மிளகாய் கன்று பாத்திக்கு தண்ணீர் மாறி கட்டுறீங்களா?

சாப்பிட்டு விரைவா வாறன்..." என்று அவர் கேட்டதும் உட­னே பதில் கூற முடி­யாத நிலை­யில்  கணவரை நோக்­கி­னேன். அவர் அனு­மதியளி­ப்பது போன்று தலையசைக்க "ஐயா, சுடுதண்ணீர் போத்தலில் தேத்தண்ணீ இருக்கு. ஊத்திக் குடிச்சிட்டுப் போங்க..." என்று கூறி தண்ணீர் கட்டத் தொடங்கினேன்.

தான் முதலில் கூறிச் சென்ற படியே அம்முதியவர் விரைவாக வந்துவிட்டார்.

மருந்து தெளித்த கணவரும் அருகிலிருந்த குளத்தில் குளித்துவிட்டு ஆலமரத்தின் கீழ் அமர்ந்து இளைப்பாறினார். அந்த முதியவரும் எமக்கருகில் வந்தமர்ந்தார்.

“ஐயா உங்கட ஊர் எது?" என கணவர் கேட்க, "தம்பி நானும் இதே ஊர்தான். ஆனா உங்களுக்கு என்னத் தெரியாது.

ஏன்னா நான் இருவது வருசமா வெளிநாட்டில் இருந்தனான்" என்று முதியவர் கூற எனக்கு ஆச்சரியமாக இருந்தது. "ஐயா, நீங்க... வெளிநாட்டிலா...! எந்த நாட்டில் இருந்­தீங் க?" நான் ஆச்சரியமாக கேட்க "லண்டன்" என பதில் பட்டென வந்தது. 

இந்த மனித­ருக்­கு உண்மையில் பைத்­தியம்  போலத்தான். பரட்டைத் தலை,  ஆள் ஒரு வித­மா­க­வும் ஆடை வேறொரு வித­மா­க­வும் இருப்­பதை பார்த்தால் வெளிநாட்டிலிருந்து வந்­தவர் போல் தெரி­ய­வில்­லையே.

ஆழ்ந்த சிந்­த­னைகளில் பல கேள்­வி­களை மன­துக்குள் கேட்டுக் கொண்­டி­ருக்கும் போது இடையே மீண்டும் பேசத் தொடங்­கினார் அவர்.

"ஆமாம் பிள்ளை... லண்டன் தான். ஆனா, ஒருவரை கத்தியால குத்திப்போட்டு லண்டன் சிறைக்கு போயிட்டன், அப்புறம் வருசக்கணக்கா ஜெயிலே வாழ்க்கையெண்டு இருந்தன்.

தண்­டனை முடிஞ்சி வெளியில் வர லண்டன் பொலிஸார் என்னை நாட்டுக்கு திருப்பி அனுப்பிப் போட்டாங்கள், ம்... எல்லாம் என் விதி..." என்ற­வாறு பெருமூச்சு விட்டபடி கூறத் தொடங்கினார் தன் கதையை.
அவர் பெயர் பீட்டர்.

அம்மா, அப்பா, அண்ணாக்கள், தங்கையென அழகிய குடும்பம். சிறு வயதில் கட்டாயப்படுத்தியும் கல்வியில் ஆர்வம் ஏற்படவில்லை.

தோட்ட வேலையே தன் வாழ்க்­கைக்கு கை கொடுத்­தது. எப்படியோ வெளிநாட்டு வேலை வாய்ப்பைத் தேடி சவூதி சென்றுவிட்­டார்.

மூன்று வருடங்கள் கடுமையாக கஷ்டப்பட்டு உழைத்து தாய் நாட்டுக்குத் திரும்பினார். இதற்­கி­டையில் வீட்­டார் அவ­ரு­க்கு திரு­ம­ணம் செய்து வைக்க திட்­ட­­மிட்­­டி­ருந்­தனர். 

ஷிலா... மிக வும் அழகானவள், அன்பானவள், அடக்கமானவள். இரு மனங்கள் ஒத்துப் போகவே திருமணமும் நடந்­தே­றி­யது.

தனியே குடித்தனம் நடத்த சென்றுவிட்­ட­னர். இரண்டு வருடங்கள் இன்பமாய்க் கழிந்தன. இரட்டைக் குழந்தைகள் வேறு. சொல்லவும் வேண்டுமா தம்­ப­தியின்  சந்தோஷத்தைப் பற்றி...

வாழ்க்­கையில் பல இன்­பங்­களை அனு­ப­­வித்து வந்த தரு­ணத்­தில் நண்பனொருவரின் சந்திப்பு ஏற்பட்டது.

அவர் மூலமே முதியவருக்கு லண்டன் செல்­லக்­கூ­டிய வாய்ப்பு கிட்டியது.

குடும்­ப­மே இன்­பத்தில் ஆழ்ந்­தி­ருந்­தது. ஆனாலும் மனைவி, பிள்ளைகளை விட்டுப் பிரிந்து கடல் கடந்து செல்வதில் உடன்பாடின்றி தவித்தார் அவர்.  என்­றாலும் மனைவி விடுவதாய் இல்லை.

"என்னங்க இது... உங்களுக்கு எப்படியொரு அதிர்ஷ்டம் கிடைச்சிருக்கு, போக மாட்டேன் என்று அடம்பிடிக்கிறீங்களே.

நீங்க அங்க போனதும் என்னையும், பிள்ளைகளையும், உங்களிடத்தில் எடுக்கப் போறீங்கதானே, பிறகேன் கவலைப்படுவான்?" என்ற அவளின் அன்பான வார்த்தைகளுடன் புறப்பட்டுச் சென்றார்.

லண்டன் சென்­றாலும் எத்­தனை அந்­நிய மொழி­களை கேட்­டாலும் அவ­ரது நேசத்­துக்­கு­ரி­ய­வர்­களின் குரல்கள் மட்­டுமே அவ­ருக்கு பெரும் ஆறு­த­ல­ளித்­தன. தொலைப்பேசியூடாக குடும்­பத்­தா­ருடன் கதைத்து தன் தனி­மை­க்கு மருந்­திட்டுக் கொண்­டார்.

நல்ல வேலை, கை நிறைய சம்பளம். ஆனால் உடனே குடும்பத்தை லண்­ட­னு­க்கு அழைப்­பிக்க இயலாமற் போயிற்று.

நம் நாட்டில் இடம்பெற்ற யுத்தமும், இடப்பெயர்வுகளும் அவரது குடும்பத்தை துரத்திச் சென்­றது.  செல்லெறி தாக்குதலின்போது அவரது  மகளின் கண் ஒன்று சிதைந்து போனது.

இதன் காரணமாக மனைவிக்கும் பிள்ளைகளுக்கும்  கொழும்புக்கு  வரும் வாய்ப்பு கிடைத்தது. கொழும்பில் இருந்தபடி மகளின் கண் பார்­வைக்­காக  சிகிச்­சையு ம் மேற்கொள்ளப்பட்டது.

இருந்தும் அவளுக்கு பார்வைதான் திரும்பிய பாடில்லை. 

இந்த நிலையில் நண்பனின் அறிவுரை அவருக்கு நல்லதொரு திட்டத்தை எடுத்து ரைத்­தது. தனக்குத் தெரிந்த நபரொருவர் மூலம் மனைவியையும் பிள்ளைகளையும் லண்­ட­னுக்கு எடுப்­பிக்க  முயற்­சிகள் மேற்­கொள்­ளு­­மாறு கூறி­யி­ருந்தார்.

மூன்று நாட்­களில் அழைத்து வரு­வதாய் கூறி­ய நபர் ஒரு வரு­ட­மா­­கி­யும் தக­வ­லெ­துவும் தராமல் இருக்­கவே முதி­ய­வ­ரு­க்கு சந்­தேகம் மேலெ­­ழும்­பி­யு­ள்­ளது. இருந்தும் மனை­வியின் தொலை­பேசி உரை­யா­டலால் தன் சந்­தேகத்தை கைவிட்­டு­விட்­டார்.

என்றே­னும் லண்­ட­னுக்கு வருவாள் என்று காத்திருந்தேன்.

ஆம் வந்தாள் ஒரு நாள். லண்டன் விமான நிலையத்தில் வந்திறங்கியவள் தன்னை அழைத்து வந்த நப­ரை விரு­­ம்பி அவ­ரு­ட­­னே பிள்­ளை­க­ளையும் அழைத்­து­ச் செல்­வ­தாக கூறிச் சென்­றுள்ளார். 

இப்படியொரு சூழ்­நிலை தன­க்கு நேர்ந்­து­விட்­டதே என்று எண்ணி மன வேத­னை­யால் மிகவும் பாதிக்கப்­பட்டார். போதை தலைக்­கேறும் வண்ணம் மதுவருந்­தி­விட்டு தன் வாழ்க்­கையை சூனி­ய­மாக்­கி­ய­வனை கொலை செய்­ய வேண்டும் என எண்ணி லண்­டனில் இருக்கும் அவனுடைய வீட்­டுக்கு சென்­றார்.

ஆனால் கொன்­றது அவனையல்­­ல, அவன் மனை­வியை... இதனால் லண்டன் பொலிஸ் அவரை கைது செய்­த­து. வழக்கு விசா­ர­ணையில் போதையில் ஏற்பட்ட விபரீதமே தன் கொலைக் குற்­றத்­துக்கு காரணம் என்று கூறிய­போ­தும் அவர் தன் மனை­வியின் அந்­த­ரங்க கதைப் பின்­பு­லத்­தைப் பற்றி கூற­வில்லை.   

கதையை முழுதாய் கேட்ட நான் "ஏன் பீட்டர் ஐயா, நீங்கள் உண்மையை சொல்லியிருக்கலாம்தானே" என்றேன்.

"எப்படிப் புள்ள சொல்லச் சொல்லுறாய்-? அந்த நாட்டுக்காரங்க நம்ம நாட்டுப் பெண்கள உயர்வா மதிக்கிறாங்க... கற்பு நெறி தவறாதவர்கள், வேற ஒருத்தியின் கணவரை விரும்பாதவள் என்று உயர்வா மதிக்கும் போது நான் எப்படி சொல்வேன் என்ற மனுசி ஒருத்­த­னோட உடன்பட்டுப் போயிட்டாள் என்று..." என்று தன் நிலையை பெரும் வேத­னை­யில் கூறி முடித்தார். 

நாடு திரும்­பிய முதி­ய­வரின் நிலை மிக­வும் பரி­தா­பத்­துக்­­கு­ரி­ய­தா­­யிற்று. ஆனால் அவரின் உற­வு­க­ளுக்கும் அய­ல­வர்­க­ளுக்கும் இவர் ஒரு பைத்­தி­யக்­கா­ரரைப் போல தோற்­ற­ம­ளித்­தி­ருக்­கிறார்.

பீட்டர் ஐயா­வுக்கு நேர்ந்­தது என்ன என அன்பாய் விசா­ரிக்க எங்­களைத் தவிர வேறு எந்­த ஜீவனும் எண்ணவில்­லையே. இதுதான் உல­கம்! 
திருமதி. அகிலதீபன் வசந்தா,
சரசாலை தெற்கு.