மித்திரன் சிறுகதை : இன்ப அதிர்ச்சி!

August 03, 2015
"பாருங்கம்மா... இப்போதைக்கு எனக்குக் கல்யாணம் வேண்டாம். தயவு செய்து கட்டாயப்படுத்த வேண்டாம்.” “ஏண்டி இப்ப கட்டிக்காம நீ கிழவியாகுனதுக்கப்புறமா கல்யாணம் பண்ணுவ.

எதுக்கு நீ கல்யாணம் வேண்டாமுன்னு அடம்பிடிக்கிற? உன்னோட படிச்சதுகள் எல்லாம் கல்யாணம் கட்டி, பிள்ளை குட்டின்னு இருக்குதுங்க.

உனக்குதான் எல்லாம் கஷ்டமா இருக்கு. உனக்கப்புறம் ஒரு பெண் பிள்ளை இருக்கா. அத மறந்திறாத.”

“அம்மா, பளீஸ்... எனக்கு இப்பதான் இருபத்தி நாலு வயசு பிறந்திருக்கு. இன்னும் ஒரு வருசமாவது போகட்டும். தங்கச்சி இப்பதானே ஏ.எல் படிக்கிறா. யாருக்கும் இப்ப கல்யாணம் பண்ண வேண்டிய அவசரமில்ல.”

“என்னவோ எனக்கு தெரியாது. நீ இதெல்லாம் உங்க அப்பாகிட்ட போய் சொல்லு. அவர என்னால் எதிர்த்துப் பேச முடியாது. நீயாச்சி உங்கப்பாவாச்சி” என்று கூறிவிட்டு எழுந்து சமையலறைப் பக்கமாகச் சென்றாள் தாய் மரகதம்.

என்ன செய்வதென்றறியாது கட்டிலில் குப்புறப்படுத்து சிந்தித்தாள் வெண்ணிலா. குமரேசன் மிகவும் கடுமையானவர்.

செல்லம் கொடுக்க வேண்டிய விடயங்களுக்கு செல்லம் கொடுப்பார். கண்டிக்க வேண்டிய விடயங்களில் கண்டிப்பார்.

வெண்ணிலாவுக்கும் சங்கீதாவுக்கும் அம்மாவிடம்தான் அதிகாரம்... ஆனால் அப்பாவைக் கண்டால் புலி சொர்ப்பனம்தான்.

வெண்ணிலாவுக்கு தரகர் மூலம் நல்ல வரன் ஒன்று பேசி வந்தது. மாப்பிள்ளை வீட்டார் பெண்ணை வெளியில் எங்கோ பார்த்து விசாரித்ததில் நல்ல குடும்பம் என்றதும் உடனே தரகர் மூலம் பெண் வீட்டாருக்கு அறிவித்தார்கள்.

குமரேசனும் தரகர் கூறியவுடன் தலையாட்டிவிடவில்லை. ஒரு வாரமாக தெரிந்தவர்கள் மூலம் நன்கு விசாரித்துப் பார்த்த பின்தான் நல்ல குடும்பம் என்ற திருப்தியில் இந்த சம்பந்தத்துக்கு சம்மதித்துள்ளார்.

திருமண ஏற்பாடுகளைப் பற்றி இரு வீட்டாரும் கலந்தாலோசித்தனர்.

“சே... இத்தனை தடவை முயற்சித்தும் இந்த ஃபோன் வேலை செய்யமாட்டேங்குதே. என்னாச்சி இவனுக்கு? அப்படியென்ன பெரிய வேலை என்னைவிட இவனுக்கு. அப்படின்னா வேலைதானே முக்கியம்.

பழகிய காலத்தில் ஒரு நிமிசம் கூட பார்க்காம இருக்க முடியவிலன்னு சொல்லுவான். ஃபொரின் போனதுக்கப்புறம் எந்த நாளும் பேசுவேன்னு சொன்னான்.

இப்ப என்னடான்னா ஃபொரின் போனவன்ட குரலைக் கேட்க நாம காத்திருக்கனும் போல இருக்குதே. வாரத்துக்கு ஒரு முறை பேசி... வாரக் கணக்காச்சு... சரி வேலை பிஸின்னு கொஞ்சம் விட்டுப் பிடிச்சா எனக்கு பெரிய சிக்கலா வந்து முடிஞ்சிடுச்சே.

மனசுல என்ன நினைச்சிக்கிட்டிருக்கானோ... அவனுக்கு அப்படியென்ன உலகம் மறந்த வேலை.

சே... சே... இந்த ஆம்பலைங்கலே இப்படித்தான். லவ் பண்ண முன்னாடி சுத்தி சுத்தி வருவாங்க. ஓ.கே சொல்லிட்டா சுத்தவிடுவாங்க. இருக்கட்டும் இவனுக்கு நல்ல பாடம் புகட்டணும்” என கண்டபடி திட்டித் தீர்த்தாள் வெண்ணிலா.

அத்தனை வெறுப்பான வார்த்தைகளை உதித்தது உதடு மட்டுமே தவிர உள்ளம் அல்ல... சந்திரன் அப்படி ஏமாற்றக் கூடியவனல்லன் என்பதில் அவளுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு.

சந்திரன் - வெண்ணிலா இருவருக்குள்ளும் இருக்கும் உன்னதமான காதல் இரண்டரை வருடங்களாக தொடர்கின்றது. இரண்டு வருடங்களுக்கு முன்புதான்

வெண்ணிலாவின் அனுமதியுடன் சந்திரன் வெளிநாட்டுக்குப் பயணமானான்.

முதலில் அனுப்ப அனுமதியளிக்காவிட்டாலும் சந்திரனின் குடும்ப நிலையைப் புரிந்துக்கொண்டு மனதுக்குள் கவலையை மறைத்து உடன்பட்டு தலையசைத்தாள். 

“வெண்ணிலா எனக்கு அப்பா இல்லை. அம்மா மட்டும்தான். அவங்க என்னை எவ்வளவு கஷ்டப்பட்டு படிக்க வைச்சாங்கன்னு வெறும் வார்த்தைகளால சொல்லிட முடியாது. நான் இன்னைக்கு ஒரு பட்டதாரியாக காரணம் என் அம்மாதான்.

எனக்கு பிறகு இரண்டு தம்பிகளை அப்பா ஸ்தானத்திலிருந்து வளர்க்க வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கு. நாளைக்கு நம்ம கல்யாண செலவுக்கு என்னால யார் கிட்டயும் போய் கை ஏந்தி நிற்க முடியாது. அதுக்காக நான் கட்டாயம் உழைச்சுதான் ஆகணும். இரண்டு வருசம்தானே. நல்ல கம்பனி. நல்ல சம்பளம்.

இரண்டு வருசம் முடிஞ்சு ஒரு நாள் கூட நான் அங்க இருக்க மாட்டேன்” என்று சந்திரன் ஆறுதல் வார்த்தைகளை கூறிச் சென்றான். 

சந்திரனின் திடீர் பிரிவை தாங்க முடியாது திண்டாடிய வெண்ணிலா அவனது ஆலோசனையின் படி கணினி கற்கைநெறி வகுப்பொன்றில் இணைந்தாள். 

நன்றாகப் படித்தாள். எல்லோரும் உறங்கிய பின்னர் சந்திரனுடன் மனம் திறந்து பேசுவாள். அப்படி அடிக்கடி பேசியவன் இப்போது இரு வாரங்கள் கடந்த நிலையிலும் தொலைப்பேசி அழைப்பை ஏற்படுத்தவில்லை என்பது வெண்ணிலாவும் மிகுந்த பயத்தை ஏற்படுத்தியுள்ளது.

வாயில் வருவதையெல்லாம் கூறி திட்டினாலும் கூட அவன் மேல் உள்ள காதல் அணுவளவேனும் குறையவில்லை. ஆனால் மாப்பிள்ளை பார்க்கும் விடயமே இப்போது வெண்ணிலாவுக்கு இடியாய் வந்து விழுந்துவிட்டது.

விடயத்தை சந்திரனிடம் கூறலாம் என்று பார்த்தால் தொலைப்பேசி அழைப்பையும் ஏற்படுத்த முடியவில்லை. 

பெண் பார்க்கும் நாளும் வந்தது. வெண்ணிலா மாப்பிள்ளை  வீட்டார் முன் அலங்காரப் பதுமையாக குனிந்த தலை நிமிராது நின்றாள். பிடிக்காத மாப்பிள்ளையை எதற்கு பார்க்க வேண்டும் என்று அலட்சியம் காட்டினாள்.

மாப்பிள்ளை “அம்மா... எனக்கு சம்மதம்” என கூறினார். இது... அவளுக்கும் பரீட்சயமான குரலாயிற்றே. யார் என்று நிமிர்ந்தவளுக்கு அதிர்ச்சி! பேரதிர்ச்சி! எல்லையற்ற ஆனந்தம்.

ஆனால் குழப்பம். தடுமாறினாள். ஆயிரம் கேள்விகள் நெஞ்சை முட்டிக்கொண்டு நின்றது.

ஆனால் மௌனம் சாதிக்க வேண்டிய சூழ்நிலை. மாப்பிள்ளை வேறு யாருமில்லை. வெண்ணிலாவின் சந்திரனேதான். 

பெண்பார்க்கும்  படலம் நிறைவடைந்த சிறிது நேரத்தில் வெண்ணிலாவின் போன் சிணுங்கியது. புதிய இலக்கம்.

ஹலோ என்றவனின் குரலைக் கேட்டு முகம் மலர்ந்தாள். அது சந்திரன்தான். “நீங்கள் எப்படி இங்கு? நான் உங்கள் செல்லுக்கு எத்தனை முறை ட்ரை பண்ணினேன் தெரியுமா...?”  என்று கூறியவளை இடைமறித்தான் சந்திரன்.

“நான் நாடு திரும்ப ஒரு மாதத்துக்கு முன்னால நம்ம விசயத்த அம்மாவுக்கு தெரியப்படுத்தினேன். அவங்களும் உடனே சரின்னு சம்மதம் சொல்லிட்டாங்க.

உன் கம்பியூட்டர் சென்டர் முகவரியை கொடுத்து உன்னைப் பார்க்கச் சொன்னேன். அம்மாவும் பார்த்துட்டு உன்னை பிடிச்சிருக்குன்னு சொன்னாங். அதுக்கப்புறம் தரகர் மூலமா எல்லாம் நல்ல படியா முடிஞ்சிருச்சு. நான் நாடு திரும்பி அஞ்சு நாளாகுது.

உனக்கு ஒரு இன்ப அதிர்ச்சியாக இருக்கட்டும் என்றுதான் நான் எதுவுமே சொல்லாமல் இருந்துட்டேன். எப்படி இருக்கு என் பரிசு...” என்று கூறிய சந்திரன் மீது செல்லமாய் கோபம் கொண்டாள் வெண்ணிலா. 


 
எஸ். நிஷாந்தினி பிரதீபன்,
குருநாகல்.