மித்திரன் சிறுகதை : செவ்விரத்தப் பூ

September 10, 2015
அதிகாலை நேரம்... கடற்கரையில் படர்ந்திருக்கின்ற ஓர் ஆலமரம்.

அதை அண்டி ஒரு தனிக்குடிசை. ஊர்மனைகள் தூரத்தே தெரிகின்றன.

கிடுகால் வேயப்பட்ட குடிசைக்கு அருகில் தான் நட்டு வைத்திருந்த செவ்வரத்தைச் செடிக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தாள் தமிழ்விழி.

அவள் முகத்தில் என்றுமில்லாத ஒருவித மகிழ்ச்சி தென்படுகின்றது.

"அம்மா... நான் தண்ணீர் ஊற்றுகின்ற இந்த செவ்வரத்தம் செடி வளர்ந்து நிறையப் பூ பூக்கும்தானே." “ஓம் தமிழ்விழி... செவ்வரத்தம் செடி நிறையப்பூ பூக்கும். பள்ளிக்கு கூட்டிக் கொண்டு போக ஈழ நிலா வரப்போகிறாள்.

வேளைக்கு வெளிக்கிடு” என்று கஞ்சி காய்ச்சிக் கொண்டிருந்த மலர் அம்மா சொன்னார்.

"அம்மா... நான் இப்ப சாப்பிடல. கட்டிக் கொண்டுபோய் பள்ளிக்கூடத்தில சாப்பிடப்போறன்.

என்ரைய கட்டித்தாங்கோ" என்று சொல்லிவிட்டு தமிழ் விழி பொதுக்கிணற்றில் ஐந்தாறு வாளி நீரில் குளித்துவிட்டு அவசர அவசரமாக பள்ளிக்கூடம் கிளம்ப ஆயத்தமானாள்.

அப்போது படலையில் தமிழ் விழியைக் கூட்டிச் செல்ல நானும் வந்து சேர்ந்தேன்.

"தமிழ்விழி, எங்கட அப்பா வெளிநாட்டிலிருந்து நேற்றுத்தான் வந்தவர். எனக்கு புதுச் சைக்கிள் வாங்கித் தந்தவர்" "ம்...ம்... உன்ர சைக்கிள் நல்ல வடிவா இருக்கு.

எனக்கும் சைக்கிள்  ஓட ஆசைதான். ஆனால் எனக்கு சைக்கிள் எடுக்க அம்மாட்ட காசில்ல... அம்மா என்னப் படிக்க வைக்கிறதுக்கு ரொம்ப கஷ்டப்படுறா” என சொல்ல வந்த விடயத்தை மனதளவோடு நிறுத்திக் கொள்கிறாள் தமிழ்விழி.

சைக்கிளில் தமிழ் விழியை ஏற்றிக் கொண்டு மிதிப் பலகையை மெல்ல சுழற்றுகிறாள். வீதியில் பேருந்துகள் செல்கின்றன.

கடலில் இருந்து மீனவர்கள் கரை திரும்பிக் கொண்டிருக்கிறார்கள்.

வீதியோரமாக சிறுவர்கள் பாடசாலைக்குச் சென்று கொண்டிருக்கிறார்கள். தமிழ்விழியின் தோற்றம் அவளுடைய குடும்பத்தின் வறுமையை கோடிட்டுக்காட்டியது.

“ஈழநிலா, எனக்கு அப்பாவும் இல்ல. உனக்குத் தெரியும்தானே. விறகு கட்டிக்கொண்டு வாரன் எண்டு போனவர் போனவர்தான். செல்லடிபட்டு செத்துப்போனார். அண்ணாவுக்கும் காலேலாது.

கிளச்சர் போட்டுத்தான் நடக்கிறவர்.

அண்ணா தன்ர சீவியத்தை தாண்டி மணிக்கூடு திருத்துற கடை வச்சிருக்கிறார். நான் படிச்சு ஒரு டொக்டராய் வரணும். அதுதான் என்ர கனவும் கூட. நாங்க முந்தி பிரச்சினைக்கை வட்டுவாகல்ல இருக்கேக்க அப்பா என்ர படிப்புக்காண்டி தன்னையே அர்ப்பணித்தவர்.

ஒவ்வொரு தவணையும் பெரிய சண்டை நடந்து குண்டுச் சத்தம் கேட்டாலும் எனக்கு புதுக்கொப்பிகள், கொம்பாஸ் பெட்டி, புத்தகப்பை வாங்கித் தருவார். நீ படிச்சு டொக்டராய் வரோனும், எனக்கு ஏதாவது வருத்தம் வரேக்க உன்னட்டத்தான் காட்ட வருவனெண்டு நகைச்சுவை கலந்த உறுதியான நம்பிக்கையோடு சொல்லுவார்.

உனக்கு தெரியும் தானே ஈழநிலா... நாங்கள் அங்க படிக்கேக்க பதினொரு மணி எண்டதும் இன்ரவல் பெல் அடிக்க முதல் சாப்பாடு கட்டிக்கொண்டு வந்திடுவார்.  நான் படிக்காட்டியும் என்ற பிள்ளை தமிழ் படிக்கோனும் எண்டு அம்மாட்ட அடிக்கடி சொல்லுவார்.

அப்பா எனக்காண்டி எவ்வளவோ தியாகங்களைச் செய்திருக்கிறார். அவரின்ட ஆசையை நான் நிறைவேற்றனும்.” அவள் என்னுடன் கதைக்கும் போது கண்கள் கலங்கியிருந்தன.

கூந்தல் கலைந்திருந்து. ஆனாலும் அவள் முகத்தில் ஒரு தன்னம்பிக்கை ஒளிக்கீற்று தெரிந்துகொண்டே இருந்தது.

எப்போதும் மெல் இதயம் கொண்டவள் தமிழ்விழி. யாருடனும் அதிகமாக கதைக்க மாட்டாள்.

சின்னக் குழந்தைகள் மீது நிறைந்த பிரியம் வைத்திருந்தாள்.

மாலைப் பொழுதுகளில் நானும் அவளும் நட்பு ரீதியாக சந்திப்போம்.

அன்றொரு ஞாயிற்றுக்கிழமை. அவளை சந்திப்பதற்கு வீட்டிற்கு நான் போயிருந்தேன். குடிசையிலான வீடாக இருந்தாலும் பூச்செடிகள் வைத்து நீர் வார்த்துக் கொண்டிருந்தாள்.

வாடாமல்லிகை, மல்லிகை, செவ்வரத்தை, நந்தியாவட்டை என பூச்செடிகள் பூத்துச் சிரித்தன.

எல்லாம் தமிழ்விழியின் பராமரிப்பால் பூத்திருக்கின்றன. "இந்த திண்ணையில் இரு ஈழநிலா.

கை கழுவிட்டு வாரன்" என்று சொல்லி விட்டுப் பின்னே கிணற்றடிக்குப் போனாள். வரும்போது எலுமிச்சைத் தண்ணீரை கிளாஸ் நிறையக் கொண்டு வந்தாள்.

"ஏன் தமிழ்விழி இப்பத்தான் வீட்டை இருந்து வரக்க சாப்பிட்டு வந்தனான்."

"பறவாயில்ல ஈழநிலா குடியடி." தனது அன்பு வார்த்தையால் குடிக்க வைத்தாள்.

அவள் சற்று முன்புதான் படித்திருக்கிறாள் என்பதற்கு அறிகுறியாக திண்ணையின் ஓரத்தில் உயிரியல் புத்தகம் கிடந்தது. அவள் உள்ளங்கையில் சின்ன சின்ன பேனாக் கோடுகள் கீறப்பட்டிருந்தன.

அவளது தளராத நம்பிக்கையும் தற்துணிவும் முயற்சியும் ஒரு நல்ல வைத்தியரை இந்தத் தாய்நாட்டிற்கு தரும் என்ற எண்ணம் எனது உள் மனதிலே தோன்றிற்று.

அவள் நாட்டி வைத்த பூச்செடிகளுக்கு அருகே இரு சிட்டுக்கள் பறந்து வந்து தேன் அருந்துகின்றன.

மேல் வானத்திலே கொக்கு ஒன்று சிறகடித்து பறந்து செல்கிறது. வானம் செந்நிற வர்ணம் பூசியதைப் போல் அழகாக இருந்தது.

எப்போதும் பெண் இன விடுதலையையும் மக்களின் சுதந்திர வாழ்வியலையும் அதிகம் நேசித்தாள்.

யுத்தத்திலே அம்மா, அப்பாவை இழந்த குழந்தைகளை கண்டு வேதனைப்பட்டாள்

. நகர வீதிகளில் கையேந்துகின்ற முதியோர்களைப் பார்த்து இரக்கப்பட்டாள்.

"ஏன் ஈழநிலா இவ்வளவு முதியோர் இல்லங்கள் இருந்தும் முதியோர் கையேந்துகிறார்?" முதியோர் இல்லங்களை மனதளவில் திட்டித் தீர்த்தாள்.

தனது சமூகத்தின் மீது மிகுந்த அக்கறை கொண்டவள் அவள். தமிழ்விழியின் நாட்குறிப்பேட்டை ஒருநாள்  நான் வாசித்தபோது “உலகத்தில் எங்கு அநீதி நடந்தாலும் அதற்காக நாம் இருவரும் இணைந்து குரல்கொடுப்போமானால் அப்போதுதான் நாம் இருவரும் தோழர்கள்” என்ற சேகுவேராவின் சிந்தனைத் துளி முற்பக்கத்தில் இருந்தது.

நாட்குறிப்பேட்டின் உள்ளே சில அழகிய படங்களை வரைந்து வைத்திருந்தாள். ஒரு பெண் வைத்தியர் நோயாளி ஒருவருக்கு வைத்தியம் பார்ப்பதைப் போல் அந்தப் படம் வரையப்பட்டிருந்தது. மறுபக்கத்திலே முதியோர் ஒருவர் விறகு  கட்டிக்கொண்டு சைக்கிள் ஓட்டிக் கொண்டு வருவது போன்ற படம், மறுபக்கத்திலே காலில்லாத ஒரு அண்ணா கிளச்சர்போட்டு நடந்து போவது மாதிரியான படம், இன்னொரு பக்கத்தில் சமையல் அறையில் தாய் அடுப்பூதுவது போல் ஒரு படம்... இப்படியாக நாட்குறிப்பேடு முழுவதும் சிந்தனைகளும் படங்களும் நிறைந்திருந்தன.

நாட்குறிப்பேட்டின் இறுதிப் பக்கத்தில் புரட்சியாளர்கள் புதைக்கப்படுவதில்லை, விதைக்கப்படுகிறார்கள் என்ற சேகுவேராவின் உயர்ந்த சிந்தனை இருந்தது.

ஏன் இவ்வாறான படங்களையெல்லாம் தமிழ்விழி வரைந்து வைத்திருக்கிறாள் என்று யோசித்துப் பார்த்தேன்.

தமிழ்விழி தனது குடும்பத்தை மையப்படுத்தியே அந்த ஓவியங்களை வரைந்து வைத்திருக்கிறாள்.

அவளது முதலாவது ஓவியத்தைப் பார்க்கின்ற போது அவள் வைத்தியராக வர வேண்டும் என்ற கனவு அவள் மனதிலே ஆழமாக வேரூன்றி இருக்கின்றது என்பதைக் காட்டுகின்றது.

தமிழ்விழி ஒரு சிறந்த இலக்கியப்படைப்பாளியும் கூட. அவளுடைய கவிதைகளும் சிறுகதைகளும் அடிமட்ட  சமூகத்தின் குரல்களாக எப்போதும் பத்திரிகைகளில் ஒலித்துக் கொண்டே இருக்கும்.

சமதர்மம் நோக்கிய சமூக விடுதலையே அவள் சிந்தனை. அவளுடைய படைப்புக்களும் அந்த அடித்தளத்திலேயே வேர் கொண்டு கிராமிய வழக்காறுகள், பண்பாட்டுக்கூறுகள் ஆகியவற்றை கலாபூர்வமாக பரிணமிக்கச் செய்தன. தமிழ்விழியின் பெரும்பாலான படைப்புக்களில் சோகம் தோய்ந்த கிராமிய குரல் கேட்டுக் கொண்டே இருக்கும்.

கடந்த வாரம் தவணைப் பரீட்சை எழுதுவதற்காக பள்ளிக்கூடத்திற்கு தமிழ்விழி நடந்து சென்று கொண்டிருந்தாள்.

நிலத்தைப் பார்த்து நடக்கின்ற சுபாவம் கொண்டவள், யாரும் அவளுடன் கதைக்கின்ற போது நிதானித்து உணர்ந்து கதைக்கும் இயல்பைக் கொண்டவள்.

இன்றைய தவணைப் பரீட்சைதான் தனது வாழ்நாளில்  இறுதிப்பரீட்சை என்று அவள் நினைத்திருப்பாளோ தெரியாது.

பரீட்சை முடிந்து வீடு திரும்புகின்ற போது பாதையோரமாக முட்புதர்களுக்கிடையே “என்னை விட்டிடுங்கோ... நான் படிச்சு டொக்டராக வர வேண்டும்.

என்னை ஒண்டும் பண்ணாதீங்க... காலில் விழுந்து கெஞ்சுகின்றேன்.

அண்ணாக்கள் என்னை விட்டுவிடுங்கோ.

அம்மா, அப்பா என்னைக் காணாமல் தேடப் போயினும் கைகூப்பிக் கும்பிடுறன்.” இப்படித்தான்  தமிழ்விழி இறுதியாக கத்தியிருப்பாள் என நான் நினைக்கின்றேன்.

சிறு வயதிலிருந்து அவளோடு சேர்ந்து பழகி ஒன்றாக விளையாடிய எனக்கு அவளுடைய இழப்பு பெரும் சோகத்தை தந்தது.

இதைக் கேள்விப்பட்டால் தமிழ்விழியின் அம்மா என்ன செய்வார். “நான் படிச்சு டொக்டராய் வரவேணும்” என்ற தமிழ்விழியின் வார்த்தைகள் மனதிலே பெரும் காயத்தை ஏற்படுத்திவிட்டது.

தமிழ்விழி தனது நாட்குறிப்பேட்டின் இறுதிப் பக்கத்தில் எழுதியிருந்த புரட்சியாளர்கள் புதைக்கப்படுவதில்லை, விதைக்கப்படுகிறார்கள் என்ற சேகுவேராவின் உயர்ந்த சிந்தனையே ஞாபகத்திற்கு வந்தது.

சில வருடங்களின் பின் இப்போது அவள் குடியிருந்த குடிசை வீதியால் நடந்து செல்கிறேன். எருக்கலையும் பட்டியும் நிறைந்து முட்புதர்களால் மூடியிருந்தது. அதனுடே ஒரு செவ்வரத்தம் பூ ஈழநிலாவின் கண்களில் பட்டது. “தமிழ்விழி, நீ எங்களை விட்டுப் போகவில்லை.

இதோ தெரிகிறதே நீ வளர்த்த இந்தச் செவ்வரத்தம் பூச்செடியின் பூ... இந்தச் செவ்விரத்த நிறப் பூ நீதான்... அது நீதான்.

அதில் உன்னைத்தான் நான் பார்க்கிறேன். நீ ஒரு புரட்சிப் பூ...! இந்தப் புரட்சிப் பூவின் கதையை நான் எப்போதும் என் கண்களுக்குள் வைத்திருப்பேன்.

 

ஆ. முல்லைதிவ்யன்